

இந்திய ஏ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணி இன்று முதல் இன்னிங்ஸில் 349 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம் 214 ரன்கள் இந்தியா ஏ அணியைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா ஏ.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடி வரும் இந்தியா ஏ அணியில் புஜாரா 11 ரன்களிலும் ’வீராவேச’ விராட் கோலி 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழ்ந்தனர். முதல் இன்னிங்ஸிலும் சொதப்பிய விராட் கோலி 16 ரன்களில் வெளியேறியது குறிப்பிடத் தக்கது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 68.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.
பான்கிராப்ட் சதம் - அபராஜித் 5 விக்கெட்டுகள்:
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணியில் உஸ்மான் கவாஜா 33 ரன்களிலும், பின்னர் வந்த பர்ன்ஸ் 8 ரன்களிலும், ஹேண்ட்ஸ் காம்ப் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய பான்கிராப்ட் சதமடித்தார்.
அவர் 267 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் குவித்து அபராஜித் பந்துவீச்சில் ஆட்மிழந்தார்.
பின்வரிசையில் பெர்குசன் 54, குரீந்தர் சாந்து 27 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தனர்.
ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத் துள்ளது. ஓ’கீப் 6 ரன்களுடனும், ஃபெகீட் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இன்று பெகீட் விக்கெட்டை பிராக்யன் ஓஜா வீழ்த்த ஆஸ்திரேலியா ஏ 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியத் தரப்பில் அபராஜித் 5 விக்கெட்டுகளையும், பிரக்யான் ஓஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இந்தியா ஏ அணி சற்று முன் வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 100 ரன்கள் தேவை என்ற நிலையில் முகுந்து 33 ரன்களுடனும் கருண் நாயர் 21 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.