மனச்சோர்வு, மன அழுத்தம்: ஆஸி. அணியின் நட்சத்திர வீரர் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

மெல்போர்ன்

மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட மனரீதியான பிரச்சினைகளால் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தற்காலிகமாக குறுகிய காலத்துக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த ஓய்வு குறுகிய காலத்துக்கு மட்டும்தான். விரைவில் அவர் அணிக்குத் திரும்புவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டி20 தொடரில் அவருக்குப் பதிலாக டி ஆர்க் ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''மேக்ஸ்வெல் அணியின் பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி, உளவியல் பயிற்சியாளர்களிடம் தனக்கு குறுகிய காலத்துக்கு ஓய்வு தேவை. தான் மன அழுத்தம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பதால், குறுகிய காலத்துக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் பேசிய அணியின் உளவியல் நிபுனர் டாக்டர் மைக்கேல் லாய்ட் மேக்ஸ்வெலுக்கு ஓய்வு தேவை என்பதை உறுதி செய்து பரிந்துரைத்தார்.

இதனால், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து மேக்ஸ்வெல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக டிஆர்க் ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் களத்தில் இறங்கி காட்டடி அடித்த மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

31 வயதாகும் மேக்ஸ்வெல் நல்ல சுழற்பந்துவீச்சாளரும், நல்ல பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இதுவரை 110 ஒருநாள் போட்டிகள், 61 டி20 போட்டிகள், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை மேக்ஸ்வெல் தலா ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். டி20 போட்டியில் 3 சதங்களை விளாசியுள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மேலாளர் பென் ஆலிவர் கூறுகையில், "அணி வீரர்கள், ஊழியர்களின் நலன் மிகவும் முக்கியம். மேக்ஸ்வெலுக்கு முழு ஆதரவு அளிப்போம். கிரிக்கெட் விக்டோரியா அணியுடன் இணைந்து ஆஸ்திரேலிய வாரியம் மேக்ஸ்வெலுக்கு தேவையான உதவிகளை வழங்கும். அவரைக் குணப்படுத்தி மீண்டும் அவரை அணிக்குக் கொண்டுவர முயல்வோம். அதேசமயம், மேக்ஸ்வெலின் தனிப்பட்ட விஷயங்கள், குடும்பம் ஆகியவற்றைக் கருதி வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in