ஆஸி. ஏ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: 135 ரன்களில் சுருண்டது இந்தியா

ஆஸி. ஏ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: 135 ரன்களில் சுருண்டது இந்தியா
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 68.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது.

சென்னையில் நேற்று தொடங் கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அபினவ் முகுந்த் - புஜாரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. புஜாரா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் களம்புகுந்தார் கோலி. அவர் நிதானமாக ஆட, மறுமுனையில் முகுந்த் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஓ’கீஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கருண் நாயர் களமிறங்க, மறுமுனையில் நிதானம் காட்டிய கோலி 42 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் நடையைக் கட்ட, 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

இதன்பிறகு கருண் நாயருடன் இணைந்தார் நமன் ஓஜா. இதன்பிறகு ஆட்டம் ஆமை வேகத்திலேயே சென்றது. ஒருமுனையில் நமன் ஓஜா தடுப்பாட்டம் ஆட, மறுமுனையில் நிதானமாக ஆடிய கருண் நாயர் அரைசதம் கண்டார். 32.5 ஓவர்களில் களத்தில் நின்ற இந்த ஜோடி, இந்தியா 109 ரன்களை எட்டியபோது பிரிந்தது. 84 பந்துகளைச் சந்தித்த நமன் ஓஜா 10 ரன்களிலும், கருண் நாயர் 153 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்தவர்களில் அபராஜித் 12, வருண் ஆரோன் 0, ஷர்துல் தாக்குர் 4, பிரக்யான் ஓஜா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 68.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. ஷ்ரேயாஸ் கோபால் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியத் தரப்பில் குரீந்தர் சாந்து 3 விக்கெட்டு களையும், ஃபெகீட், ஓ’கீஃப், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா-43/0

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. பான்கிராப்ட் 24, கேப்டன் உஸ்மான் கவாஜா 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட ஆஸ்திரேலியா இன்னும் 92 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

கலாமுக்கு அஞ்சலி

நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு இரு அணி வீரர்களும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். போட்டியின்போது இரு அணியினரும் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in