

டாக்கா
ஊழல்தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ள வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை நினைத்து சகவீரர்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்
சகவீரர்கள் மஷ்ரஃபே மோர்டசா, முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஷாகிப் அல்ஹசனிடம், தீபக் அகர்வால் என்ற சூதாட்டத் தரகர் தொடர்பு வைத்திருந்தார். ஐசிசி விதிமுறைப்படி வீரர்களை எந்த சூதாட்டத் தரகர்கள் அணுகினாலும் உடனடியாக அதை சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம், அல்லது ஐசிசியிடம் புகார் அளிக்க வேண்டும்.
ஆனால் ஷாகிப் அல்ஹசன் அவ்வாறு புகார் அளிக்கவில்லை. சர்வதேச அளவில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சூதாட்டத் தரகரின் தொலைபேசி எண்களை ஆய்வு செய்தபோது, தீபக் அகர்வாலுடன் ஷாகிப் அல்ஹசனிடம் பேசியுள்ளதை ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு கண்டுபிடித்தது.இதையடுத்து, 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டது.
ஷாகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்ட தடையை நினைத்து சக வீரர்கள் மோர்டசா, முஷ்பிகுர் ரஹிம் வேதனையுடன் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
முஷ்பிகுர் ரஹிம் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்தில், " வயதின் அளவு, சர்வதேச அனுபவம், 18 ஆண்டுகளாக சர்வதேச அளவில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். நீங்கள் இல்லாத களத்தில் எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. விரைவில் சாம்பியனாக திரும்பி வருவீர்கள் என்று நம்புகிறோம். என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும், வங்கதேச மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். மனதைரியத்துடன் இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மோர்டசா வெளியிட்ட பதிவில் " ஷாகிப் இல்லாததை நினைத்து, எனக்கு இனிவரும் நாட்கள் தூக்கமில்லா நாட்களாகவே உண்மையில் இருக்கப்போகிறது. 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஷாகிப் அல்ஹசன் தலைமையில் நாங்கள் விளையாடுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்
, ஐஏஎன்எஸ்