

வங்கதேச அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன், ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அனைத்துக் கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்தும் 2 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை அவர் மீறியதாக 3 குற்றச்சாட்டுகள் எழ அனைத்தையும் அவர் விசாரணையில் ஒப்புக் கொண்டதையடுத்து ஐசிசி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
12 மாதங்கள் அதாவது ஓராண்டுக்கு எந்த வித கிரிக்கெட்டையும் அவர் ஆட முடியாது, இன்னொரு ஓராண்டு சஸ்பெண்டட் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ச்-பிக்ஸிங் தொடர்பாக அணுகிய தரகர்கள் குறித்து சகிப் அல்ஹசன் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்புக்குத் தகவல் தெரிவிக்காததையடுத்து, இந்த தடையை ஐசிசி விதித்துள்ளது.
வரும் நவம்பர் 3-ம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வங்கதேச அணி 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த நேரத்தில் ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டதால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சகிப் அல்ஹசனிடம், ஒரு சூதாட்ட தரகர் அணுகி மேட்ச் பிக்ஸிங் குறித்துப் பேசியுள்ளார். ஆனால், சகிப் அல்ஹசன் அதை ஏற்கவில்லை. ஆனால், ஐசிசி விதிமுறைப்படி வீரர்களை எந்த சூதாட்டத் தரகர்கள் அணுகினாலும் உடனடியாக அதை சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம், அல்லது ஐசிசியிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால், சகிப் அல்ஹசன் அவ்வாறு புகார் அளிக்காததால் தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
சர்வதேச அளவில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சூதாட்ட தரகரின் தொலைப்பேசி எண்களை ஆய்வு செய்தபோது, அவர் சகிப் அல்ஹசனிடம் பேசியுள்ளதை ஐசிசி கண்டுபிடித்துள்ளது. ஆனால், இதுகுறித்து ஐசிசி அமைப்பின் ஊழல் தடுப்பு அமைப்பிடம் சகிப் புகார் தெரிவிக்காததால் தற்போது 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார்.
முதல் ஓராண்டு முழுத் தடை காலக்கட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் மேலும் இது போன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் ஊழல் தடுப்பு கற்பித்தல் வகுப்புகளில் அவர் பங்கேற்பதோடு மறுவாழ்வு திட்டங்களிலும் அவர் பங்கேற்பது கட்டாயமாகும்.
இந்த ஓராண்டை மேலும் தவறுகள் செய்யாமல் ஐசிசி விதிமுறைகளின் படி அவர் செயல்பட்டால் அக்டோபர் 29, 2020 அவர் தடை விலக வாய்ப்புள்ளது. ஐசிசியின் குற்றச்சாட்டுகளை ஷாகிப் அல் ஹசன் ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவுக்கு வங்கதேசம் வரும் நிலையில் அந்த நாட்டின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஊழல் குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணிக்கு உலக கிரிக்கெட் அரங்கில் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.