எம்.சி.சி.- முருகப்பா ஹாக்கி: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ஐஓசி

எம்.சி.சி.- முருகப்பா ஹாக்கி: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ஐஓசி
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்ற 89-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் தொடர்ந்து 2வது முறையாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் முருகப்பா தங்கக்கோப்பா தேசிய ஹாக்கி போட்டி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்ற இத்தொடர் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஐஓசி அணியும், ராணுவ லெவன் அணியும் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆடின. முதல் பாதியின் 5-வது நிமிடத்தில் ராணுவ லெவன் வீரர் பவல் லக்ரா தனது அணிக்கான முதல் கோலை அடித்து 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார்.

பதில் கோல் அடிப்பதற்காக ஐஓசி அணி கடுமையாகப் போராடியது. 15-வது நிமிடத்தில் ஐஓசி வீரர் ஹம்ஸா முஸ்தபா கோலடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஐஓசி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஐஓசி வீரர் தீபக் தாகுர் கோலடித்து, தன் அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச்செய்தார். அதைத் தொடர்ந்து 55-வது நிமிடத்தில் ஐஓசியின் டிடர் சிங் கோலடித்தார். இதனால், ஐஓசி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்க ஆர்மி லெவன் வீரர்கள் தீவிர முயற்சி செய்தனர். 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆர்மி வீரர் சந்தன் கோலடித்தார். இதனால், 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்மி அணி பின்தங்கியது. ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளையும், முன்னதாக பல கோல் வாய்ப்புகளையும் ஆர்மி அணி வீணடித்தது. இதனால், ஆர்மி அணிக்கு மேலும் கோல்கள் கிடைக்கவில்லை.

இறுதியில், ஐஓசி அணி 3-2 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியனானது.

பரிசு

சாம்பியன் பட்டம் வென்ற ஐஓசி அணிக்கு எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பையுடன் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2-வது இடம்பெற்ற ராணுவ லெவன் அணிக்கு ரூ.2.5 லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in