Published : 29 Oct 2019 03:27 PM
Last Updated : 29 Oct 2019 03:27 PM

முதல் தர கிரிக்கெட் வீரர்களையும் ஒப்பந்த முறையில் கொண்டு வருவதற்கு முன்னுரிமை: கங்குலி திட்டவட்டம்

உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டி உறுப்பினரும் வரலாற்று அறிஞருமான ராமசந்திர குஹா தன் பொறுப்பிலிருந்து விலகிய போது, ஐபிஎல் வீரர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.

தற்போது கங்குலி பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்தர கிரிக்கெட் வீரர்களையும் பிசிசிஐ ஒப்பந்த முறைக்குக் கீழ் கொண்டு வர முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“முதல்தர கிரிக்கெட் வீரர்களையும் ஒப்பந்த முறையில் கொண்டு வர ஏற்பாடு செய்யவிருக்கிறோம், நாங்கள் இது தொடர்பாக புதிய பிசிசிஐ நிதிக்குழுவிடம் ஒப்பந்த முறையைக் கொண்டு வருமாறு கேட்கவுள்ளோம்” என்று கங்குலி பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

மேலும், “நான் இதற்காக சிஓஏவிடம் 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். தற்போது இதுதான் என் முன்னுரிமை, முதல் தர கிரிக்கெட் வீரர்களின் நிதி நிலைமைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்” என்றார்.

இது மட்டும் செய்ய முடிந்து விட்டால் நாட்டின் முதல் தர கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்கள் நல்ல விதத்தில் ஏற்படும் என்று கிரிக்கெட் தொடர்பான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ தற்போது தனது மொத்த வருவாயில் 26% தொகையை வீரர்களுக்கு அளித்து வருகிறது. வீரர்கள் ஆடும் போட்டி எண்ணிக்கையைப் பொறுத்து தனி வீரரின் வருவாய் தீர்மானிக்கப்படுகிறது. ஆடும் போட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x