

டாக்கா,
வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசனுக்கு 18 மாதங்கள் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேட்ச்-பிக்ஸிங் தொடர்பாக அணுகிய தரகர்கள் குறித்து சகிப் அல்ஹசன் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்புக்குத் தகவல் தெரிவிக்காததையடுத்து, இந்த தடையை ஐசிசி விதிக்கும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வரும் நவம்பர் 3-ம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வங்கதேச அணி 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த நேரத்தில் ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சகிப் அல்ஹசனிடம், ஒரு சூதாட்ட தரகர் அணுகி மேட்ச் பிக்ஸிங் குறித்துப் பேசியுள்ளார். ஆனால், சகிப் அல்ஹசன் அதை ஏற்கவில்லை. ஆனால், ஐசிசி விதிமுறைப்படி வீரர்களை எந்த சூதாட்டத் தரகர்கள் அணுகினாலும் உடனடியாக அதை சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம், அல்லது ஐசிசியிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால், சகிப் அல்ஹசன் அவ்வாறு புகார் அளிக்காததால் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.
சர்வதேச அளவில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சூதாட்ட தரகரின் தொலைப்பேசி எண்களை ஆய்வு செய்தபோது, அவர் சகிப் அல்ஹசனிடம் பேசியுள்ளதை ஐசிசி கண்டுபிடித்துள்ளது. ஆனால், இதுகுறித்து ஐசிசி அமைப்பின் ஊழல் தடுப்பு அமைப்பிடம் சகிப் புகார் தெரிவிக்காததால் தற்போது 18 மாதங்கள் வரை தடையைச் சந்திக்க உள்ளார் எனத் வங்கதேச நாளேடான 'சமக்கல்' செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக சகிப் அல்ஹசன் சமீபத்தில் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார்.அப்போது அவருக்கு எதிராகத் தடைவிதிக்கப்படும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 6 மாதங்கள் விளையாடத் தடையும், அதிகபட்சமாக 18 மாதங்களும் விளையாடத் தடைவிதிக்கப்படலாம் என்று சகிப் அல்ஹசனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பை ஐசிசி ஓரிரு நாட்களில் வெளியிடலாம்.
இங்கிலாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் சகிப் அல்ஹசன் 8 இன்னிங்ஸ்களில் 606 ரன்களும், 11 விக்கெட்டுகளையும் சாய்த்தார். லீக் ஆட்டங்களில் சிறப்பாக வங்கதேசம் ஆடிய போதிலும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதியாகவில்லை.
உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின் ஜம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரில் சகிப் அல்ஹசன் விளையாடினார். ஆனால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் சகிப் அல்ஹசன் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. கடந்த இரு நாட்களாக வங்கதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் சகிப் அல்ஹசன் பங்கேற்கவில்லை. சகிப் அல்ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டால், மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.