Published : 28 Oct 2019 07:45 PM
Last Updated : 28 Oct 2019 07:45 PM

பாக். அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்: ஆஸி. க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறக்க பரிசீலனை

பாக். அணியின் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு ‘ஆச்சரியகரமான தேர்வு’ ஆக இருக்கும் என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

16 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா களமிறக்கப்பட்டால், ஆஸ்திரேலியாவில் மிகச் சிறு வயதில் இறங்கும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா பிப்ரவரி 15, 2003ல் பிறந்தவர். முதல் தர கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை 59 ரன்களுக்குக் கைப்பற்றியுள்ளார்.

அவர் குறித்து மிஸ்பா உல் ஹக் ஆஸி. ஊடகம் ஒன்றில் தெரிவிக்கும் போது, “ஆஸி. பிட்ச்களில் நசீம் ஷா வீசுவதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். இங்கு பிட்ச்கள் நல்ல வேகமும் எழுச்சியும் கொண்ட பந்துகளுக்கு உதவும்.

அனைவருமே அந்தச் சிறுவனைச் சேர்க்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவில் அவர் எப்படி வீசுகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

நசீம் ஷா, புதிய, பழைய பந்துகளில் நன்றாக வீசுகிறார். அவர் வீசும் வேகத்தில் நல்ல இடங்களில் அவர் வீசத் தொடங்கினால் ஆஸ்திரேலியா தொடரில் அவர் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்த முடியும்” என்றார்.

அடுத்த மாதம் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் தொடங்குகிறது. இதில் நசீம் ஷா ஆட முடிந்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகமாகும் 9வது இளம் வீரர் ஆவார்.

நசீம் ஷா கூறும்போது, “ஆஸி.க்கு எதிராக வாய்ப்பளித்தால் என் வேகம் மற்றும் ஸ்விங் மூலம் நான் என்னைக் கவனிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்” என்கிறார்.

சிட்னியில் வரும் ஞாயிறன்று 3 டி20 போட்டிகளில் முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x