Published : 27 Oct 2019 02:37 PM
Last Updated : 27 Oct 2019 02:37 PM

சிறந்த அணியாக விரும்பும் அணிகள் கோலி தலைமை இந்திய அணியைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்: இயன் சாப்பல் புகழாரம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பெற்ற ஒயிட்வாஷ் வெற்றி, இந்திய அணியின் திறமை, விராட் கோலியின் முன்னுதாரணம், இந்திய வேகப்பந்து வீச்சின் புதிய எழுச்சி என்றும் இந்திய அணி எங்கு வேண்டுமானாலாலும் எப்பொது வேண்டுமானாலும் எந்த ஒரு அணியையும் அதன் உள்நாட்டிலும் எதிரணியினர் மண்னிலும் சந்திக்கும் அசாத்திய அணியாக உருவாகியுள்ளது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

இந்திய அணி தங்கள் வேகப்பந்து வீச்சில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ளது. பும்ரா இல்லாமலேயே இந்த வேகப்பந்து வீச்சுக் கூட்டணி தங்கள் உள்நாட்டில் பிரமாதமாக வீசி வருகின்றனர். இதன் பின்னணியில் பல ஆண்டுகள் திட்டம்வகுப்பு, பல அகாடமிகள் இதன் பின்னணியில் உள்ளது, இன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த பிட்சிலும் பெரிய சவால்தான்.

மொகமது ஷமி, நல்ல முன்னேற்றம் கண்டுள்ள இஷாந்த் சர்மா, பும்ரா,வேகம் காட்டும் உமேஷ் யாதவ் ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியினருக்கு எந்த பிட்சாக இருந்தாலும் தங்களை மதிக்குமாறு வற்புறுத்துகின்றனர். இதுதவிர இந்தியாவின் பலமான எப்போதும் ஸ்பின்னும் சேர்ந்து வேறு எந்த அணியுடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு இந்திய அணி உள்ளது. இதனுடன் நல்ல உடற்தகுதியுடைய ஹர்திக் பாண்டியாவையும் உள்நுழைத்து விட்டால் எந்த பிட்சிலும் இந்திய அணி எதிரணியை எதிர்கொள்ள நல்ல நிலையிலேயே இருக்கும்.

பேட்டிங்கில் மற்ற அணிகள் தொடக்கத்தில் விளையாடக்கூடிய திறமையை நோக்கிச் செல்லும் போது இந்திய அணி கூடுதல் திறமையாக ரோஹித் சர்மாவை தொடக்கத்தில் இறக்கி அழகுபார்க்கிறது. அணித்தேர்வில் மட்டும் இன்னும் கொஞ்சம் தங்களை சரியான வழியில் திரட்டிக் கொண்டால் இந்திய அணி ஒரு பவர் ஹவுஸ்தான்.

இந்திய வெற்றியில் இன்னொரு காரணி பிரகாசிக்கும் அதன் கேப்டன் விராட் கோலிதான். அனைத்து பிட்ச்களிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர். ஜொலிப்பதற்கான கோலியின் ஆசை அணியினரிடமும் தொற்றிக் கொள்ள ஒட்டு மொத்த அணியுமே சிறந்த அணியாக இருப்பதற்கான ஆசையினைக் கொண்டுள்ளது.

தொடர் முடிந்தவுடன் கோலி மிகப்பிரமாதமாகக் கூறினார், இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மேற்கோள்: ”டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் சிறந்த அணியாக விரும்புகிறோம். நேர்மையான நோக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றினால் சிறந்த அணி என்ற தகுதி நம்மைத் தொடரும்” என்றார். இதில் “நோக்கத்தில் நேர்மை” என்ற கோலியின் கூற்று பிற நாட்டு அணிகளுக்கான விழிப்பேற்படுத்தும் அழைப்பாகும்.

இந்தியா நிறைய பணம், திறமை, ஐபிஎல் ஆகியவற்றுடன் பெரிய சாதக நிலையில் இருக்கின்றது. சிறந்தவற்றை சாதிப்பதற்கான அவர்களது அணுகுமுறை அதே போல் சிறப்பாக ஆட வேண்டும் என்று கருதும் மற்ற அணிகளும் பின்பற்ற வேண்டியது அல்லது நகலெடுக்க வேண்டிய அணுகுமுறையாகும்.

இவ்வாறு அந்தப் பத்தியில் தெரிவித்துள்ளார் இயன் சாப்பல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x