Published : 27 Oct 2019 10:29 AM
Last Updated : 27 Oct 2019 10:29 AM

வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் சென்னையின் எப்சி: மும்பை அணியுடன் சென்னையில் இன்று மோதல்

சென்னை 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணியுடன் மோதுகிறது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 6-வது சீசன் போட்டிகள் கடந்த 20-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இரு முறை சாம்பியனான சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் கோவா அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இந்நிலையில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணியை சந்திக்கிறது.

உள்ளூர் சாதக அம்சங்களுடன் சென்னையின் எப்சி அணி முதல் வெற்றியை பதிவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியின் டிபன்ஸ் பலவீனமாக காணப்பட்டது. சென்டர்-பேக் வீரர்களான லூசியன் கோயன், சபியா ஆகியோரிடம் சிறந்த திறன் வெளிப்படவில்லை.

மேலும் அனிருத் தாபாதொடக்கத்தில் களமிறக்கப்படவில்லை. மாறாக 2-வது பாதியின்தொடக்கத்தில் பதிலி வீரராக களமிறங்கினார். மும்பை அணியின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கக்கூடும்.

மும்பை சிட்டி எப்சி அணி தனது தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்த அணியின் சென்டர்-பேக் வீரரான மேட்டோ கிரிக் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுகள வீரரான பாலோ மச்சாடோவும் காயம் காரணமாக களமிறங்குவது சந்தேகம் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் களமிறங்கவில்லை என்றால் மும்பை அணி சற்று அழுத்தத்தை சந்திக்கக்கூடும். அணியின் டிபன்ஸில் பிரதிக் சவுதாரி, சர்தாக் கோலூயி பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். அதேவேளையில் ஸ்டிரைக்கரான அமீன் செர்மிட்டி, சென்னை அணியின் டிபன்ஸுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். அமீன் செர்மிட்டி, கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்துஅணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

மேலும் மோடோ சோகு, கார்லோஸ் ஆகியோரும் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும். இதற்கிடையே இன்றைய ஆட்டம் குறித்து சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகோரி கூறுகையில், “சொந்த மண்ணில் எங்களது ரசிகர்கள் முன்னிலையில் முதல் ஆட்டத்தை விளையாட உள்ளோம். உண்மையாகக் கூறவேண்டுமெனில் எங்களது வீரர்கள்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.

நாங்கள் எப்படி வெல்லப் போகிறோம் என்பது பற்றி கவலை இல்லை. நாங்கள் 3 புள்ளிகளை பெறுவது அவசியமாக உள்ளது. அடுத்த இரு ஆட்டங்களில் அதிகபட்ச புள்ளிகளை பெற்றால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்று அல்லது இரு மாற்றங்கள் மேற்கொள்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x