

பெங்களூரு
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது கர்நாடக அணி.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அபிநவ் முகுந்த் 110 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், பாபா அபராஜித் 84 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்தனர். விஜய் சங்கர் 38, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரரான முரளி விஜய் டக் அவுட்டிலும் 3-ம் நிலை வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்களிலும் நடையை கட்டினர். 24 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் அபிநவ் முகுந்த், அபராஜித் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 3-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் அபிநவ் முகுந்த், பிரதீக் ஜெயின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் தமிழக அணி 37 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. ஆனால் அடுத்த ஓவரில் பாபா அபராஜித் ரன் அவுட் ஆனதும் நிலைமை தலைகீழாக மாறியது. கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் 9.5 ஓவர்களை வீசி 34 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 5 விக்கெட்களை சாய்த்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஷாருக்கான் (27), எம்.மொகமது (0), முருகன் அஸ்வின் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார் அபிமன்யு மிதுன். விஜய் ஹசாரே டிராபி வரலாற்றில் கர்நாடகா வீரர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். நேற்று தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடிய அபிமன்யு மிதுனுக்கு இறுதிப் போட்டி சிறந்த பரிசாக அமைந்தது.
253 ரன்கள் இலக்குடன் பேட்செய்த கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டியை நடத்தி முடிக்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க விஜேடி விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
விதிமுறையின் படி 23 ஓவர்களில்கர்நாடக அணி 87 ரன்கள் சேர்த்திருந்தாலே போதுமானதாக இருந்தது.
இதனால் கர்நாடக அணி 60ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி சார்பில் மயங்க் அகர்வால் 55 பந்துகளில், 3 சிக்ஸர்கள்,7 பவுண்டரிகளுடன் 69 ரன்களும்,கே.எல்.ராகுல் 72 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களும்விளாசினர். விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும்.