Published : 25 Oct 2019 08:33 PM
Last Updated : 25 Oct 2019 08:33 PM

முதலில் என்னை அணியில் தேர்வு செய்ய மறுத்தனர்: சச்சின் டெண்டுல்கர் மனம் திறப்பு

மும்பை, பிடிஐ

சிறு பிராயத்தில் கையில் மட்டையைப் பிடித்துக் கொண்டு வெறும் உடம்புடன் தலை முழுக்க முடியுடன் சச்சின் டெண்டுல்கர் குழந்தையாகக் காட்சியளிக்கும் புகைப்படம் இந்திய மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கும். பிறகு 25 ஆண்டுகள் மைதானம் முழுதும் ‘சச்சின்... சச்சின்’ என்ற ரசிகர்களின் ஆரவாரங்களையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

ஓய்வு பெறும் போது சச்சின் டெண்டுல்கர் இதனைத் தெரிவித்த போது அவரது தீவிர ரசிகர்களுக்கும் கண்களில் நீர் வழிந்திருக்கும். அப்பெயர் பெற்ற சச்சின் டெண்டுல்கர் முதன் முதலில் அணித்தேர்வுக்குச் சென்ற போது தேர்வாகவில்லை என்பது நமக்கு ஆச்சரியமாக இருப்பதோடு, அதிர்ச்சியாகவுமே தொனிக்கும். ஆனால் அதுதான் உண்மை என்கிறார் சச்சின்:

“எனக்கு இன்று கூட நினைவிருக்கிறது. நான் என் முதல் அணித்தேர்வு சோதனைகளுக்குச் சென்ற போது, என்னை அணியில் தேர்வு செய்ய மறுத்தனர். நான் இன்னும் கடினமாக உழைத்து என் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றனர் அணித்தேர்வாளர்கள்.

அப்போது எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது ஏனெனில் நான் நன்றாக பேட் செய்வதாகவே நான் கருதியிருந்தேன். ஆனால் ரிசல்ட்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. அதனால் நான் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அதன் பிறகுதான் கடினமாக உழைக்க வேண்டிய கடப்பாடும், உறுதியும் என்னில் ஏற்பட்டது. எதற்குக் கூறுகிறேன் என்றால் நம் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமெனில் குறுக்கு வழிகள் ஒருபோதும் பயனளிக்காது என்பதைக் கூறவே.

என் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு, குறிப்பாக என் குடும்பத்தினருக்கு அதிக பங்கு உண்டு, என் அக்காதான் எனக்கு வாழ்க்கையில் முதல் கிரிக்கெட் மட்டையைப் பரிசாக அளித்தார்.” என்றார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x