

பெங்களூரு
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம்- கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அரை இறுதிஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்திஇருந்தது. அதேவேளையில் மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி தனது அரை இறுதியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் சத்தீஷ்கரை தோற்கடித்திருந்தது.
பேட்டிங், பந்து வீச்சில் இருஅணிகளும் சமபலம் பொருந்தியதாக உள்ளது. இரு அணியின் பேட்டிங் வரிசை ஆழமானதாக உள்ளதால் பந்து வீச்சு செயல்திறனே வெற்றியை தீர்மானிப்பதாக அமையக்கூடும். கர்நாடக அணியில் கே.எல்.ராகுல் 10 ஆட்டங்களில் 546 ரன்கள் குவித்து சிறந்த பார்மில் உள்ளார்.
598 ரன்களை வேட்டையாடி உள்ள மற்றொரு தொடக்க வீரரானதேவ்தத் படிக்கலும் தமிழக பந்து வீச்சாளர்களுக்கு சவால்தரக்கூடும். மணீஷ் பாண்டே, மயங்க்அகர்வால், கருண் நாயர் ஆகியோரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
தமிழக அணியை பொறுத்தவரை இந்தத் தொடரில் 480 ரன்கள்சேர்த்துள்ள பாபா அபராஜித், 440 ரன்கள் எடுத்துள்ள அபிநவ் முகுந்த் ஆகியோருடன் முரளி விஜய்,ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்,இளம் வீரர் ஷாருக்கான், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரராக உரு வெடுத்துள்ள தினேஷ் கார்த்திக் ஆகியோர்பேட்டிங்கில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
கர்நாடக அணியின் வேகப்பந்து வீச்சில் வி.கவுசிக், அபிமன்யு மிதுன், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் சுழலில் கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயஸ் கோபால், பிரவீன் துபே ஆகியோர் தமிழக அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாகி உள்ளனர்.
அதேவேளையில் போட்டி நடைபெறும் மைதானம் சிறிய பவுண்டரி எல்லைகளைக் கொண்டது என்பதால் அதிரடியாக விளையாடக்கூடிய மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோரை கட்டுப்படுத்துவதில் தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கூடுதல் மெனக்கெட வேண்டி உள்ளது.
வேகப்பந்து வீச்சில் டி.நடராஜன், எம்.மொகமது, கே.விக்னேஷ் ஆகியோர் தொடக்க ஓவர்களில் விக்கெட்களை கைப்பற்றும் பட்சத்தில் கர்நாடக அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.