Published : 23 Oct 2019 02:51 PM
Last Updated : 23 Oct 2019 02:51 PM

பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் முக்கிய நிர்வாகிகள் யார்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார், இவருடன் பணியாற்றவிருக்கும் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா.

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர், இவர் தற்போது பிசிசிஐ செயலராக பணியாற்றவிருக்கிறார். ஜெய் ஷாவுக்கு வயது 31. 2009 முதல் குஜராத் கிரிக்கெட் சங்கத்துடன் இருந்தவர். இவர் ஒரு இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, பொருளாளராக இமாச்சல கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த அருண் சிங் துமால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர். 44 வயதாகும் இவர் அனுராக் தாக்கூர் பிசிசிஐ தலைவராக இருந்த 2012-15 காலக்கட்டத்தில் இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக இவரும் அதே 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

மூன்றாவதாக ஜெயேஷ் ஜார்ஜ், இவர் பிசிசிஐயின் புதிய இணைச் செயலாளர், இவர் கேரள கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர். ஜார்ஜ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக எர்ணாக்குளம் கிளப் ஒன்றில் ஆடியவர். சமீபத்தில் இந்தியா ஏ அணி நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட போது அணி மேலாளராகப் பணியாற்றியுள்ளார். இவருக்கு வயது 50.

4வதாக மஹிம் வர்மா, இவர் துணைத்தலைவர், உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர். இவர் கிரிக்கெட் வீரராக வந்திருக்க வேண்டியவர், ஆனால் இளம் பிராயத்தில் விபத்து ஒன்றைச் சந்தித்ததையடுத்து நிர்வாகத்துறைக்கு வந்து விட்டார்.

ஆகவே பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் நெருக்கமாகப் பணியாற்றும் 4 நிர்வாகிகளில் ஜெய் ஷா, அருண் சிங் துமால் ஆகியோர் பாஜகவுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x