

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமத்தை பிசிசிஐ ரத்து செய்யலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.
சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகளும், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் விதித்து சில தினங்களுக்கு முன்பு உத்தர விட்டது லோதா தலைமையிலான குழு.
அதைத் தொடர்ந்து இந்த இரு அணிகளுக்குப் பதிலாக புதிய அணிகள் சேர்க்கப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன.
இந்த நிலையில் லோதா கூறியதாவது:
இரு அணிகளின் ஒப்பந் தத்தை ரத்து செய்து அந்த அணிகளை முற்றிலுமாக ஐபிஎல் போட்டியிலிருந்து நீக்குவது தொடர்பாக பிசிசிஐ பரிசீலிக் கலாம். அது ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
அந்த இரு அணிகளையும் தன் தலைமையிலான கமிட்டி ஏன் தடை செய்யவில்லை என்பது குறித்து விளக்கிய அவர், “அது எங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது. நாங்கள் ஒழுங்கு நடவடிக்கை குழுவாகத்தான் நியமிக்கப்பட்டோம். ஒப்பந்த விதிமுறைகள் குறித்து மட்டுமே நாங்கள் ஆராய முடியும்.
ஆனால் ஒப்பந்த விதிமுறை உள்ளிட்ட எல்லாவற்றையுமே பிசிசிஐதான் கையாள்கிறது. அதனால் நாங்கள் அதில் தலையிட முடியாது.
பிசிசிஐ, ஐபிஎல், கிரிக்கெட் ஆகியவற்றின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஓர் அணியோ, அதன் உரிமையாளர்களோ, அணியை வைத்திருக்கும் நிறுவனங்களோ செயல்படுமானால் அதன் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என பிசிசிஐ-ஐபிஎல் விதிமுறை யிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.