

வூஹான்
சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் 7-வது உலக ராணுவ விளையாட்டு போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பாரா தடகளத்தில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர், 12 விநாடிகளில் கடந்தார். பெருநாட்டின் காசாஸ் ஜோஸ் (12.65 விநாடிகள்) வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் பஜார்டோ பார்டோ தியோடிசெலோ (12.72 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
32 வயதான ஆனந்தன் குணசேகரன் 400 மீட்டர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பந்தய தூரத்தை அவர், 53.35 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
கொலம்பியாவின் தியோடிசெலோ (58.95) வெள்ளிப் பதக்கமும், பிரான்சின் ராஞ்சின் மைக்கேல் (1:00.31) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் ஆனந்தன் குணேசேகரன் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.