Published : 22 Oct 2019 08:34 PM
Last Updated : 22 Oct 2019 08:34 PM

தமிழ்நாடு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் துரதிர்ஷ்டம்: யுவராஜ் சிங் வேதனை 

கனமழை காரணமாக பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே டிராபி நாக் அவுட் போட்டி நடைபெறாமல் போனதால் 9 போட்டிகளில் வென்ற தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மழையினால் ஏற்கெனவே 39 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 174/6 என்று ஓவருக்கு 4.46 என்ற ரன் விகிதம்தான் வைத்திருந்தது, தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 12 ஓவர்களில் 52/2 என்று இருந்த நிலையில் மழையினால் ஆட்டம் முடிவேற்படாமல் போனது, இதனையடுத்து அதிக வெற்றிகள் (9) காரணமாக தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் மந்தீப் சிங் , “இப்படியாக வெளியேறுவது துரதிர்ஷ்டவசமானது. இந்த மாதிரி முடிவு வருவது மோசமான விதிமுறையினால்தான். 20ம் தேதி மழை பெய்திருந்தால் கர்நாடகா அல்லாமல் புதுச்சேரி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும். இது அர்த்தமற்றது, ஆனால் ஒன்றும் செய்ய முடியாது” என்று புலம்பித்தள்ளியுள்ளார்.

ஆனால் விஷயம் என்னவெனில் தமிழ்நாடு ஆடிய பிரிவு சியில் மொத்தம் 10 அணிகள். பஞ்சாப் அணியுள்ள பிரிவு பி-யில் 9 அணிகள். எனவே பஞ்சாப் ஒவ்வொரு போட்டியிலும் வென்றிருந்தாலும் தமிழ்நாடுதான் தகுதி பெறும். ஏனெனில் பஞ்சாப் லீகில் 5 போட்டிகளில்தான் வென்றுள்ளது, தமிழ்நாடு 9 போட்டிகளில் வென்றுள்ளது.

இந்நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் இந்திய நட்சத்திரம் யுவராஜ் சிங், தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டுக்கு எதிராக பஞ்சாப் அணிக்கு மீண்டும் ஒரு துரதிர்ஷ்டமான முடிவு. பஞ்சாப் அணி இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டது. புள்ளிகள் அடிப்படையில் நாம் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. ஏன் இன்னொரு நாள் ‘ரிசர்வ்’ ஆக ஒதுக்கக் கூடாது? அல்லது உள்நாட்டுத் தொடர்தானே அதனால் இதெல்லாம் ஒரு பிரச்சினையில்லையா?” என்று வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x