Published : 22 Oct 2019 03:54 PM
Last Updated : 22 Oct 2019 03:54 PM

இந்தியா பேட்டிங்கில் காட்டிய ‘கருணையற்ற தன்மை’ எங்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்து விட்டது: டுபிளெசி விரக்தி

நிறவெறிகாலத் தடைகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் மைய நீரோட்டக் கிரிக்கெட்டுக்கு வந்தது முதல் மிக மோசமான ஒயிட்வாஷ் தோல்வியை இந்திய அணியிடம் தற்போது சந்தித்துள்ளது.

1992க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியை இருமுறை ஒயிட்வாஷ் செய்தது என்றாலும் தோல்வி இந்த அளவுக்கு இல்லை, தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ் தோல்விகள்,அதுவும் பெரிய தோல்விகள் தென் ஆப்பிரிக்க அணியை இன்னொரு ஜிம்பாப்வேயாக மாற்றி விடுமோ என்ற அச்சம் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

டுபிளெசி இந்த அணியை ‘மாற்றத்தில் உள்ள அணி’ என்று வர்ணிக்கிறார். “கிரேம் ஸ்மித் நீண்ட காலத்துக்கு தென் ஆப்பிர்க்க அணியை வழிநடத்தினார், அதன் பிறகு ‘யார் கேப்டன், என்ன நடக்கப்போகிறது?’ என்ற ஐயுறும் நிலையே இருந்தது.

இந்த இந்தியத் தொடர் உண்மையிலேயே கடினமானது. இதற்கு முன்பாக 30-40 டெஸ்ட்கள் ஆடிய முதிர்ச்சியடைந்த வீரர்கள் இருந்தனர். திடீரென இப்போது பார்த்தால் 6,7,8 10 டெஸ்ட் போட்டிகள் ஆடிய வீரர்களே அணியில் உள்ளனர்.

துணைக்கண்டத்தில் ஆடும்போது எங்கள் பந்து வீச்சுப் பாணி வெற்றியடைவதில்லை. தேவைக்கேற்ப பந்து வீச்சை மாற்றிக் கொள்ள வேண்டும். டேல் ஸ்டெய்ன் இங்கு நன்றாக வீசினார் என்றால் அவருக்கும் அதே திறமை இருந்தது. ஆனால் இந்த பவுலர்களின் பந்து ஸ்டம்புகளை மிஸ் செய்கிறது, அல்லது ஸ்டம்புக்கு மேல் செல்கிறது. இங்கு எங்கள் பாணி பவுலிங் பயனளிக்கவில்லை.

எனவே இங்கு வேகப்பந்து வீச்சு ஒரு பகுதி, ஸ்பின்னிலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக இருந்தது, அனைத்தையும் விட இந்திய அணியின் பேட்டிங்.. முதல் இன்னிங்ஸ்களில் இந்திய அணியினரின் கருணையற்ற பேட்டிங் எங்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்து விட்டது. நிச்சயமாக ஒவ்வொரு முறையும் அவர்கள் முதலில் பேட் செய்தார்கள். இது அவர்களுக்குக் கொஞ்சம் சுலபமாக அமைந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் 500, 600 என்று ரன்களைக் குவித்தனர். இது எங்கள் பேட்டிங் வரிசை மீது சொல்லொணா அழுத்தத்தை ஏற்படுத்தியது.அதாவது ஆட்டத்தின் எந்த ஒரு தருணத்திலும் ஒளிந்து கொள்ள இடமில்லாதது போல் ஆகிவிட்டது.

உடலும் மனமும் சோர்வடையும் போது தவறுகள் செய்கிறோம். இது போன்ற தொடர்கள் மனத்தில் ஆறாப்புண்ணாகி அதிலிருந்து வெளி வருவது கடினமாகி விடும், ,முதல் டெஸ்ட்டில் நன்றாக ஆடினோம், ஆனால் அதன் பிறகு தொடர் அழுத்தங்களினால் நாங்கள் மனரீதியாக வலுவான அணியாக இல்லை என்பதை உணர்த்துகிறது. இந்த இடத்தில்தான் தற்போது நிறைய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்றார் டுபிளெசி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x