

பெ.மாரிமுத்து
உலக காது கேளாதோர் டென்னிஸ் போட்டி துருக்கி நாட்டின் அன்டால்யா நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னை அடையாறைச் சேர்ந்த பிரித்வி சேகர் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்துக்கு மட்டும் அல்லாது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
26 வயதான பிரித்வி செவித்திறன் குறைபாடு கொண்டவர். பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இளநிலை எழுத்தராக பணியாற்றி வருகிறார். 8 வயது முதலே டென்னிஸ் மீது தீரா காதல் கொண்ட பிரித்வியை அவரது பெற்றோர்களான சேகர், கோமதி ஆகியோர் ஊக்கப்படுத்த தனது விளையாட்டு திறனை சிறந்த அளவில் மெருகேற்றிக் கொண்டார்.
பள்ளி காலங்களில் பல்வேறு பதக்கங்களை குவித்த பிரித்வி அதன் பின்னர் எஸ்ஆர்எம் கல்லூரியில் பிடெக் படிப்பும் அதனை தொடர்ந்து எம்பிஏ-வையும் நிறைவு செய்தார். கல்லூரி காலங்களில் பல்கலைக்கழ கங்களுக்கு இடையிலான போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
மேற்கல்வியை முடித்ததும் பிரித்வி சேகரிடம் வேலை, சம்பளம் ஆகியவற்றை விட டென்னிஸ் விளையாட்டில் சாதனை புரிய வேண்டும் என்கிற லட்சியமே மேலோங்கி இருந்தது. இதையே அவரது பெற்றோரும் இலக்காக கொண்டிருந்தனர். பிரித்வியின் கனவு மெய்ப்படும் வகையில் அவருக்கு ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்கள் பிரிவில் பணி கிடைத்தது.
பணியில் சேர்ந்த பிறகு தனது திறனை பயிற்சியாளர்களான சுரேஷ் குமார், பாலாஜி ஆகியோர் மூலம் மேலும் பட்டைத் தீட்டிக் கொண் டார். தேசிய அளவில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் உலக சாம்பியன் ஷிப்பில் போட்டித் தரவரிசையில் இல்லாத வீரராகவே பங்கேற்றார்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக, போட்டித் தர வரிசையில் முன்னணியில் இருந்த 4 வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார் பிரித்வி. முதல் இடத்தில் இருந்த ஹங்கேரி வீரர் காபோர் மாதே இவரிடம் வீழ்ந்த வீரர்களில் முக்கியமானவர். இறுதி சுற்றில் உலகத் தர வரிசையில் 3-வது இடத்தில் உள்ள செக் குடியரசு வீரரான ஜரோஸ்லவ் ஸ்மேடக்கை எதிர்த்து விளையாடினார் பிரித்வி. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரித்வி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இந்தத் தொடரில் பிரித்வி ஒரு செட்டை கூட இழக்காமல் தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார். இரட்டையர் பிரிவில் பிரசாந்த்தஷரத் ஹர்சம்பவியுடன் இணைந்து விளையாடிய பிரித்வி சேகர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்த ஆண்டு பிரித்வி சேகருக்கு மறக்க முடியாததாக அமைந்துள்ளது.
இந்திய ரயில்வே அணியின் ஒரு அங்கமாகவும் பிரித்வி சேகர் உள்ளார். இந்த அணி பல்கேரியாவில் நடைபெற்ற உலக ரயில்வே டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக்கில் பிரித்வி, ஜஃப்ரீன் ஷேக்குடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
உலக சாம்பியன் பட்டம் வென்றது குறித்து பிரித்வி சேகர் கூறுகை யில், “தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தொடரை பொறுத்தவரையில் அனைத்து ஆட்டங்களும் சவாலாகவே இருந்தது. எனினும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஸ்திரியாவின் மரியோ கார்க்லை வீழ்த்துவது மிகுந்த சிரமமாக இருந்தது. அடுத்தது ஆசிய விளையாட்டில் கலந்து கொள்ள உள்ளேன்.
தற்போது ஆல் இந்தியா டென்னிஸ் தரவரிசையில் 25-வது இடத் திலும், உலக டென்னிஸ் தரவரிசையில் 1,796-வது இடத்திலும் உள்ளேன். ஏடிபி தொடரில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்தத் தொடரில் பங்கேற்க வேண்டுமானால் ஐடிஎப் வட்டாரத்தில் அதிக புள்ளிகளை குவிக்க வேண்டும். தற்போது அதை நோக்கியே பயணித்து வருகிறேன்” என்றார்.