Published : 22 Oct 2019 10:33 AM
Last Updated : 22 Oct 2019 10:33 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணியின் முதல் ஒயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உச்சம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4ம் நாள் காலை இன்று இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இந்திய அணியிடம் முதன்முதலாக 3-0 ஒயிட்வாஷ் பெற்றது.

மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வெற்றிதான் இந்த அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாகும்.

இந்தியாவில் இந்திய அணி 11 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது. 2012-13-ல் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வாங்கிய உதை தற்போது தொலைதூர நினைவானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 5 வெற்றிகளுடன் 240 புள்ளிகள் என்று மற்ற அணிகளைக் காட்டிலும் வெகுதொலைவில் முதலிடத்தில் உச்சம் பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் உதை வாங்கியது, ஆஸ்திரேலியாவில் முதன் முதலாகத் தொடரை வென்ற ஆசிய அணியாக இந்தியா திகழ்ந்தது. சரியாக அந்த அயல்நாட்டுத் தொடர்களெல்லாம் முடிந்த பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று அறிவிக்கிறது, அதாவது இந்திய அணி உள்நாட்டுத் தொடர்களில் பிரதானமாக ஆடும் காலக்கட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது, யாருடைய நலன்ககளுக்காக இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் தனது 15வது வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். அதிலிருந்து சுமார் 15 ஆண்டுகள் சென்று தன் 30வது வயதில் இந்திய அணிக்குள் நுழைந்து 4 விக்கெட்டுகள் ஒரு ரன் அவுட் என்று அசத்தியுள்ளார். 400 முதல் தர விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் இந்திய அணியில் நுழைந்து முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசியது, எடுத்த எடுப்பிலேயே லைன் லெந்த் போன்றவற்றில் அவரது திறமையை பளிச்சிடச் செய்தது, இவர் ஒரு கிளாசிக்கல் இடது கை சுழற்பந்து வீச்சாளர்.

இன்று அடுத்தடுத்த பந்துகளில் ஷாபாஸ் நதீம்தான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க சம்பிரதாயங்களை முடித்து வைத்தார்.

இன்றைய ஆட்டத்தை ஷமி தொடங்கி முதல் ஓவரில் 1 ரன் கொடுத்தார். 2வது ஓவரை நதீம் வீசினார். 5வது பந்தில் டி புருய்ன் 30 ரன்களில் அவுட் ஆனார். மேலேறி வந்து ஆட முயன்றார் நதீம் லெந்த்தை கொஞ்சம் குறைக்க பிறகு புருய்ன் ஷாட்டை மாற்றி கட் செய்ய முயன்றார் பந்து தாழ்வானதால் அடி விளிம்பில் பட்டு சஹாவின் அருமையான கேட்ச் ஆனது.

அடுத்த பந்தில் இறங்கிய லுங்கி இங்கிடி, நதீம் பந்தை பளார் என்று அடிக்க அது ரன்னர் முனையில் நின்று கொண்டிருந்த நார்த்யே இடது கை மணிக்கட்டில் பட்டு வந்ததை நதீம் கேட்ச் எடுத்தார், மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் அவுட் ஆனார் இங்கிடி. தென் ஆப்பிரிக்கா 48 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட். 202 ரன்களில் பெரிய தோல்வி, முதன் முதலில் இந்தியாவிடம் 3-0 ஒயிட்வாஷ். இந்தியா ஒரு இன்னிங்ஸில் 116.3 ஓவர்கள் ஆடியது, தென் ஆப்பிரிக்கா மொத்தமே 104 ஓவர்களை இரண்டு இன்னிங்ஸ்களில் ஆடியது, இந்த தென் ஆப்பிரிக்க அணி அதன் மாறும் காலக்கட்டத்தில் உள்ளது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ரோஹித் சர்மாதான். இந்தத் தொடரில் முகமது ஷமி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x