Published : 21 Oct 2019 04:01 PM
Last Updated : 21 Oct 2019 04:01 PM

60 ரன்கள் கொடுத்து 10 விக். கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்: வாசிம் அக்ரம் பாணியில் புதிய அச்சுறுத்தல்

ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் நியூசவுத்வேல்ஸ் அணிக்கு ஆடும் மிட்செல் ஸ்டார்க் 60 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி எதிரணி டாஸ்மேனியாவை நொறுக்கியதன் மூலம் ஆஸ்திரேலிய அணித்தேர்வாளர்களுக்கு மீண்டும் ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் அவரை அணியில் எடுப்பதற்கு ஆஸி. நிர்வாகம் கடுமையாக யோசித்தது, ஆனால் அது அணியின் புதிய கொள்கையான வேகப்பந்து வீச்சாளர்களை காயத்திலிருந்து காக்கும் சுழற்சித் தேர்வு முறையைக் கடைபிடித்ததினால் ஸ்டார்க்கிற்கு தொடர் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

ஆனால் அவர் உள்நாட்டு ஷெபீல்ட் ஷீல்ட் 4 நாள் போட்டியில் நியுசவுத்வேல்ஸ் அணிக்காக டாஸ்மேனியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 40 ரன்களுகு 5 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்சில் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 60 ரன்களுக்கு 10 விக்கெட் என்று அசத்தியுள்ளார்.

மேலும் முதல் தர கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க் 4வது முறையாக ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

தற்போது புதிதாக வாசிம் அக்ரம் பாணியில் ரவுண்ட் த விக்கெட்டில் அதிகம் வீசி தொடக் கடினமான ஒரு பவுலராக மாறி வருவதாக ஆஸ்திரேலிய ஊடகம் விதந்தோதியுள்ளது. வாசிம் அக்ரம் ஓவர் த விக்கெட்டில் வீசுவதை விட ரவுண்ட் த விக்கெட்டில் ‘டெரர்’. வாசிம் அக்ரமுக்கு முன்னதாக மால்கம் மார்ஷல் ரவுண்ட் த விக்கெட்டில் படு அபாயகரமான பவுலராக இருந்துள்ளார், இதைப்பற்றி சுனில் கவாஸ்கரிடமும், மைக் கேட்டிங்கிடமும், கிரகாம் கூச்சிடமும் கேட்டால் ஆழமாக நமக்குத் தெரியவரும்.

அந்த வகையில் ரவுண்ட் த விக்கெட் பயங்கர யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங், வேகம், நேர்த்தி என்று புதிய அவதாரம் ஸ்டார்க் எடுத்துள்ளதாக ஆஸி.ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்ட்டே வாய்ப்பு பெற்ற ஸ்டார்க், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் பற்றி ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “நான் தேர்வாளர் அல்ல, ஆனால் ஸ்டார்க் ஏன் அணியில் இருக்க முடியாது, தாரளமாக அவர் அணியில் இடம்பெறலாம்” என்றார்.

மேலும் ஸ்மித் கூறும்போது, “வலைப்பயிற்சியில் ஸ்டார்க்கை ஆடினேன். அவரது பந்து வீச்சு எனக்குக் கடினமாக இருந்தது. அவரது ரன் அப் முதல் மாற்றங்கள் செய்துள்ளார்” என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக புதிய மிட்செல் ஸ்டார்க் ஆடினால் ஏற்கெனவே வெந்த பாகிஸ்தானின் புண்ணில் வேல் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x