Published : 21 Oct 2019 03:36 PM
Last Updated : 21 Oct 2019 03:36 PM

வங்கதேச கிரிக்கெட் முன்னணி வீரர்கள் போர்க்கொடி: இந்தியத் தொடரைப் புறக்கணிப்பு?

வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் அதன் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த அணியின் முன்னணி வீரர்கள் வாரியத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதோடு ‘ஸ்ட்ரைக்’ செய்யவும் முன் வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து அடுத்து இந்தியாவுக்கு வரும் வங்கதேச அணியில் முன்னணி வீரர்கள் இடம்பெறுவார்களா என்பது ஐயமாகியுள்ளது, அல்லது ஒருவேளை தொடரே சிக்கலானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது நாட்டில் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் குறித்து வீரர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வங்கதேச பிரீமியர் லீக் டி20 தொடர் ஐபிஎல் பாணியில் உரிமையாளர்கள் பாணியில் நடத்தப்பட்டு வந்தது, ஆனால் சூதாட்டம் உள்ளிட்ட கிரிக்கெட் ஊழல் புகார்களினால் வாரியம் உரிமையாளர்கள் அணிகளை நடத்தும் முறையை ரத்து செய்தது. இதனையடுத்து வீரர்களின் வருவாய் மிகவும் குறைந்து போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் முதல் தர கிரிக்கெட்டில் வீரர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.

அந்த அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டனான முன்னணி வீரர் ஷாகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். “கிரிக்கெட் வீரர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர், இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தப்பட வேண்டும்” என்றார். ஷாகிப் அல் ஹசன் விமர்சனத்துக்கு மற்ற முன்னணி வீரர்களிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.

புதனன்று உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த ஷாகிப் உல் ஹசன், “கிரிக்கெட் வாரியத்திடம் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லை உலகக்கோப்பை போட்டிகள் என்றால் 6-8 மாதம் திட்டமிடுகிறோம், ஆனால் மற்ற தொடர்களில் அந்தந்த சமயத்தில் மட்டுமே திட்டமிடப்படுகிறது. ரசிகர்களோ எல்லா போட்டியிலும் வங்கதேசம் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்று மரம் நட்டு நாளையே பழம் முளைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் தொலைநோக்கில் திட்டமிட முடியவில்லை.

இங்குதான் இங்கிலாந்துக்கு ஒரு ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நிர்வாகத்தில் கிடைத்தது போல் இங்கும் ஒருவர் நிர்வகிக்க வேண்டும், ஸ்ட்ராஸ் அங்கு அனைத்து நிர்வாகப் பிரச்சினைகளையும் கவனித்து கொள்கிறார். அதாவது முன் நோக்கிய பார்வை கொண்ட ஒருவர் தேவை” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x