Published : 21 Oct 2019 02:46 PM
Last Updated : 21 Oct 2019 02:46 PM

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆஸி.யைச் சேர்ந்த புதிய பயிற்சியாளர் நியமனம்

மும்பை

இந்தியன் பிரீமியர் லீக்கில் முக்கிய அணியாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ பேரி மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகச் செயல்படுவார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வரும் முன், கடந்த 2009-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடியுள்ளார் டொனால்ட். அதன்பின் 2012-13-ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள மெக்டொனால்ட் பெரும்பாலும் விக்டோரியா, சிட்னி தண்டர், லீசெஸ்டர்ஷையர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் ஆகிய அணிகளுக்காவே விளையாடியுள்ளார்.

95 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய 4825 ரன்களும், 93 டி20 போட்டிகளில் விளையாடி 1743 ரன்களும் சேர்த்துள்ளார். அதேபோல முதல் தரப்போட்டிகளில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் மெக்டொனால்ட் வீழ்த்தியுள்ளார்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து மெக்டொனால்ட் கூறுகையில், " ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பொறுப்பை ஏற்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எனக்கு புதிதான அணி, ஏராளமான சவால்கள் இருக்கின்றன. இந்த பொறுப்பை ஏற்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, அதற்காக தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத் தலைவர் ரஞ்சித் பர்தாக்கூர் கூறுகையில், " ஆன்ட்ரூவை தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் சாம்பியன் கனவை அவரிடம் நாங்கள் பகிர்ந்துள்ளோம், எங்கள் அணியின் முக்கியத்துவம், வீரர்களின் தனித்தன்மை ஆகியவற்றை தெரிவித்துள்ளோம். அடுத்த ஐபிஎல் தொடரில் ஆன்ட்ரூவின் பங்கு சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்

முன்னாள் ஐபிஎல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஆண்டு 7-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x