Published : 21 Oct 2019 01:31 PM
Last Updated : 21 Oct 2019 01:31 PM

71 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு: பிராட் மேனின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா

சதம் அடித்த மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா : படம் உதவி ட்விட்டர்

ராஞ்சி

71 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட் மேனின் சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

ராஞ்சியில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

டெஸ்ட் தொடருக்கு லாயக்கற்றவர், தேறமாட்டார், சிவப்பு நிறப் பந்தில் ஆடுவதற்கு பொறுமை போதாது என்றெல்லாம் ரோஹித் சர்மா விமர்சிக்கப்பட்ட நிலையில், அத்தனை விமர்சனங்களுக்கும் இந்த டெஸ்ட் தொடரில் அவர் பதில் அளித்துள்ளார்.

ராஞ்சியில் நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் முறையாக இரட்டை சதம் அடித்து 212 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதங்கள் அடித்து டெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 176,127,14,212 ரன்கள் என 529 ரன்கள் சேர்த்து சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.

  • தென் ஆப்பிரக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரோஹித் சர்மா 529 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு வீரேந்திர சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக 544 ரன்கள் சேர்த்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்து வருகிறது. ஒரு டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 500 ரன்களுக்கு மேல் குவிக்கும் 5-வது இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர், வினு மன்கட், புதி குந்த்ரன், சேவாக் ஆகியோர் 500 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார்கள்.
  • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிகமான ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையிலும் ரோஹித் சர்மா இடம் பிடித்துள்ளார். அந்த வரிசையில் விராட் கோலி இலங்கைக்கு எதிராக (2017-18) 610 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்து சேவாக் (544), கங்குலி (534), ரோஹித் சர்மா (529), லட்சுமண் (503) ஆகியோர் உள்ளனர்.
  • இந்த டெஸ்ட் தொடரில் 3 இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ளார்கள். ஒரு டெஸ்ட் தொடரில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் இரட்டை சதம் அடிப்பது இதுதான் முதல் முறையாகும். மயங்க் அகர்வால் (215), விராட் கோலி (254), ரோஹித் சர்மா (212).

  • ரோஹித் சர்மா இதுவரை 18 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,298 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும். 10-க்கும் அதிகமான இன்னங்ஸ்களில் விளையாடி சிறந்த பேட்டிங் சராசரியை வைத்துள்ள பேட்ஸ்மேன்களில் டான் பிராட்மேனை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா. பிராட் மேன் 98.22 ரன்கள் சராசரி வைத்துள்ள நிலையில், ரோஹித் சர்மா 99.84 ரன்கள் சராசரி வைத்து 71 ஆண்டுகால பிராட்மேனின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார்
  • இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் ஒரு டெஸ்ட் தொடரில் 3 சதம், அதற்கு மேல் அடித்த வரிசையில் சுனில் கவாஸ்கர் மட்டுமே உள்ளார். கடந்த 1978-ம் ஆண்டு மே.இ.தீவுகள் தொடரில் கவாஸ்கர் 4 சதங்கள் அடித்தார். அதற்குப் பிறகு ரோஹித் சர்மா தற்போது 3 சதங்கள் அடித்துள்ளார். மேலும் கவாஸ்கர் இதுபோன்று 4 முறை 3 சதங்கள் அடித்துள்ளார்.
  • டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வரிசையில் ரோஹித் சர்மா 19 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன் மே.இதீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் 15 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இதற்கு முன் நியூஸிலாந்துக்கு எதிராக ஹர்பஜன் சிங் 14 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டியில் 50 சிக்ஸர்களையும் ரோஹித் சர்மா நிறைவு செய்துள்ளார். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா அடித்த 19 சிக்ஸர்களில் 11 சிக்ஸர்கள் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் பீடெட் பந்துவீச்சில் அடிக்கப்பட்டதாகும்.
  • ரோஹித் சர்மா உள்நாட்டில் கடைசியாக விளைடிய 9 இன்னிங்ஸ்களில் கடந்த டெஸ்ட்டில் அடித்த 14 ரன்கள்தான் மிகவும் குறைந்தபட்சமாகும். மற்றவகையில் மீதமுள்ள 8 இன்னிங்ஸ்களிலும் 4 அரை சதங்கள், 4 சதங்கள் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x