

சென்னை திருவொற்றியூரில் உள்ள வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் முருகப்பா இளையோர் கால்பந்து அகாடமி நேற்று தொடங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் அமைக் கப்பட்டுள்ள இந்த அகாடமியை ஏஎம்எம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எம்.வி.சுப்பையா தொடங்கிவைத்தார்.
இந்திய அளவில் கால்பந்து பயிற்சியளித்து வரும் தொண்டு நிறுவனமான டெல்லியைச் சேர்ந்த இந்திய இளையோர் கால்பந்து சங்க (ஐஒய்எஸ்ஏ) உதவியுடன் நடத்தப்படவுள்ள இந்த அகாட மியில் முதற்கட்டமாக வெள்ளை யன் செட்டியார் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ஏஎம்எம் அறக்கட்டளையின் ஆலோசகர் என்.மகத்துவராஜ் கூறியதாவது: 10 முதல் 15 வயது வரையிலான ஏழை மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சியளிப்பதற்காக முருகப்பா இளைஞர் கால்பந்து அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெள்ளையன் செட்டியார் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் திருவொற்றியூரில் உள்ள மற்ற பள்ளி மாணவர்களையும் இந்த அகாடமியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.
தற்போது இந்த அகாடமியில் சேர்வதற்கு வெள்ளையன் செட்டியார் பள்ளி மாணவர்கள் 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக 100 பேருக்கு பயிற்சியளிக்க திட்டமிட்டிருப்பதால் மேற்கண்ட 400 மாணவர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்தப்படும். அதனடிப்படையில் 100 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதித்தேர்வு பயிற்சி முகாம் நாளை முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் பயிற்சியளிக்கப்படும். இந்த 100 மாணவர்கள் ஏ, பி என இரு பிரிவாக பிரிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் மாலை வேளையில் பயிற்சி யளிக்கப்படும். பயிற்சிக்கான உடை, உபகரணங்கள் மட்டு மின்றி பயிற்சி முடிந்த பிறகு சத்துமிகுந்த உணவும் இலவசமாக வழங்கப்படும்.
கால்பந்து பயிற்சியாளர்கள் சுரேந்தர், டெல்லி பாபு மற்றும் ஓர் இணைப் பயிற்சியாளர் ஆகியோர் பயிற்சியளிப்பார்கள். இந்த பயிற்சியாளர்களுக்கு டெல்லியில் இரண்டு வார காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதவிர 100 மாணவர்களுக்கும் கால்பந்து குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அதில் வாழ்க்கைக் கல்வி, ஊக்கமருந்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும் என்றார்.