Last Updated : 20 Oct, 2019 02:01 PM

 

Published : 20 Oct 2019 02:01 PM
Last Updated : 20 Oct 2019 02:01 PM

'ஸ்ட்ரைட் டிரைவ்' சிக்ஸருடன் முதல் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா: சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார்

ராஞ்சி,

ராஞ்சியில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தனக்கே உரிய ஸ்டைலில் சிக்ஸர் அடித்து இரட்டை சதத்தை நிறைவு செய்தார்.

அதிரடியாக பேட் செய்த ரோஹித் சர்மா, 255 பந்துகளில் 212 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் 28 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 419 ரன்கள் சேர்த்துள்ளது. அஸ்வின் 2 ரன்னிலும், ஜடேஜா 32 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் ரஹானே 83 ரன்களிலும், ரோஹித் சர்மா 117 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இருவரும் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். மிகவும் நேர்த்தியான ஷாட்களை ஆடிய ரஹானே டெஸ்ட் அரங்கில் தனது 11-வது சதத்தை 170 பந்துகளில் நிறைவு செய்தார். உள்நாட்டில் ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப்பின் ரஹானே சதம் அடித்து 115 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரோஹித் சர்மா 199 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.

முதல் 50 ரன்களை 80 பந்துகளிலும், 2-வது 50 ரன்களை 44 பந்துகளிலும், 3-வது 50 ரன்களை 69 பந்துகளிலும் ரோஹித் சர்மா எட்டினார். அதைத் தொடர்ந்து வந்த ஜடேஜா, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். அதன்பின் ரோஹித் சர்மா வின் ஆட்டம் வேகமெடுத்தது. பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார் ரோஹித் சர்மா.

இங்கிடி வீசிய 88-வது ஓவரில் 'ஸ்ட்ரைட் ட்ரை'வில் இறங்கி வந்து தனக்கே உரிய ஸ்டைலில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்து 249 பந்துகளில் தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். அதே ஓவரில் மற்றொரு சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மா அசத்தினார்.

ரபாடா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா 255 பந்துகளில் 212 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 28 பவுண்டரிகள் 6 சிக்ஸர் அடங்கும்.

32 வயதான ரோஹித் சர்மா ஏற்கனவே ஒருநாள் ஆட்டத்தில் 3 இரட்டை சதங்கள் அடித்த நிலையில் டெஸ்ட் போட்டியிலும் முதலாவது இரட்டை சதம் அடித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்த வரிசையில் சச்சின், சேவாக், கெயில் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்கள் வரிசையில் தற்போது ரோஹித் சர்மாவும் சேர்ந்து கொண்டார். மேலும், ஒருநாள் போட்டியில் இரு இரட்டை சதம் அடித்தபின் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களில் 5-வது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். இதற்கு முன் வினூ மன்கட், புத்தி குன்தேரன்,சுனில் கவாஸ்கர், சேவாக் ஆகியோர் வரிசையில் சேவாக்கும் இணைந்தார்

இந்த டெஸ்ட் தொடரில் அதிகமான சிக்ஸர்களை ரோஹித் சர்மா அடித்துள்ளார். இதுவரை 17 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, மே.இ.தீவுகள் வீரர் ஹெட்மயரின் 15 சிக்ஸர் சாதனையையும் முறியடித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு டெஸ்டில் 13 சிக்ஸர்கள் அடித்து, வாசிம் அக்ரமின் 12 சிக்ஸர் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x