

ராஞ்சி,
ராஞ்சியில் இன்று தொடங்கிய 3வது, இறுதி டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா தனது தொடர்ச்சியான 10வது டாசை இழக்க இந்திய அணி முதலில் பேட் செய்து போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.
ரோஹித் சர்மா 164 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 117 ரன்களுடனும் அஜிங்கிய ரஹானே தகுதியுடைய ஒரு அபார சதத்தை நோக்கி 83 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
சாதனை உடைப்புகளில் ரோஹித் சர்மா:
ரோஹித் சர்மாவுக்கு இது சாதனை உடைப்புக் காலக்கட்டமாகும். டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்களை (17) அடித்த வகையில் சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. இந்த ஆண்டிலும் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் ஈட்டியுள்ளார். 4 டெஸ்ட்களில்தான் இந்த ஆண்டில் ஆடியுள்ளார் ரோஹித், அதில் சிக்சர்கள் சாதனை என்றால் அது சாதாரணமல்ல.
அதே போல் 4வது விக்கெட்டுக்காக 185 ரன்களை இன்னும் ஆட்டமிழக்காமல் சேர்த்த ரோஹித்-ரஹானே கூட்டணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4வது விக்கெட்டுக்காக அதிகபட்ச ரன் கூட்டணி அமைத்த சாதனையையும் நிகழ்த்தினர். ரஹானே உள்நாட்டில் தனது வேகமான அரைசதத்தை எடுத்தார்.
வேகப்பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷத்தை அமைதியாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா, வழக்கம் போல் தென் ஆப்பிரிக்காவின் பலவீனமான ஸ்பின்னை தனது ஸ்கோரிங் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார், பியட் ஓவர்களில் வெளுத்து வாங்கி சுமார் 20 பந்துகளில் 29 ரன்களை அவர் ஓவர்களில் மட்டுமே எடுத்தார் ரோஹித் சர்மா. இதில் இவரை லாங் ஆஃப் மேல் பெரிய சிக்சரை அடித்து இந்தத் தொடரில் தன் 3வது சதத்தையும், டெஸ்ட் வாழ்க்கையில் 6வது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
ரோஹித்தின் இன்னொரு சாதனை என்றால் பியட் பந்து வீச்சில் மட்டும் இந்தத் தொடரில் 11 சிக்சர்களை அடித்து, ஒரே பவுலரை ஒரு டெஸ்ட் தொடரில் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் சாதனையையும் நிகழ்த்தினார்.
மேலும் 1978-ல் சுனில் கவாஸ்கர் ஒரு தொடரில் 3 சதங்கள் அடித்தார் அதன் பிறகு ரோஹித் சர்மா ஒரே தொடரில் 3 சதங்கள் என்று இதுவரை கவாஸ்கரைச் சமன் செய்துள்ளார்.
காலையில் ரபாடா தனது பந்து வீச்சில் முந்தைய டெஸ்ட் போட்டிகளின் தவறை திருத்திக் கொண்டது தெரிந்தது, ஷார்ட் ஆக வீசுவதைத் தவிர்த்து நல்ல வேகத்தில் ஸ்விங்குடன் வீச ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் சந்தேகத்துடன் ஆடினர், பந்துகள் மட்டையை மீறிச் சென்றன. ரபாடா 2 விக்கெட்டுகளை அந்த ஸ்பெல்லில் 15 ரன்களுக்குக் கைப்பற்றினார், மயங்க் அகர்வாலை ஒர்க் அவுட் செய்து ஸ்லிப் கேட்ச் ஆக்க, புஜாராவுக்கு வேகமாக ஒரு இன்கட்டரை வீசினார் அவ்வளவுதான் பின் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
விராட் கோலிக்கு நார்த்தியே அருமையாக 2 பந்துகளை வெளியே எடுத்து ஒரு பந்தை உள்ளே கொண்டு வர, உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மென் பவுலரின் மனத்தை வாசிக்க வேண்டும், ஆனால் கோலி தவறான லைனில் ஆடினார், தொட்டதெல்லாம் துலங்கும் ஒரு காலக்கட்டம் என்பதால் மாட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ஆனால் நேராக முன் கால் காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார், ரிவியூ பயனளிக்கவில்லை. 39/3.
இடது கை சுழற்பந்து அறிமுக டெஸ்ட் வீச்சாளர் ஜார்ஜ் லிண்டே ரோஹித் சர்மாவின் எட்ஜைப் பிடித்தார், ஆனால் 28 ரன்களில் அவருக்கு ஷார்ட் லெக்கில் ஹம்சா கேட்சை விட்டார், அதன பலனை இப்போது அனுபவிக்கின்றனர்.
இதனால் உணவு இடைவேளைக்குப் பிறகு ரோஹித் சர்மா அடித்து ஆடத் தொடங்கினார். ரபாடாவை ஜாக்கிரதையாக ஆடினார், ஆனால் ரஹானே ரபாடாவின் அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்கத் தொடங்கினர், அது முதல் இந்தியாவின் பக்கம் ஆட்டம் மாறியது.