

கார்டிப்பில் நடைபெறும் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 2-ம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.
343/7 என்ற நிலையில் மொயீன் அலி 26 ரன்களுடனும் ஸ்டூவர் பிராட் தனது கணக்கைத் தொடங்காமலும் இன்று களமிறங்கினர். இருவரும் இணைந்து 52 ரன்களை துரித கதியில் 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
26 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 எடுத்த பிராட், நேதன் லயன் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று ஹேடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மொயீன் அலி மிகச் சுதந்திரமாக விளையாடி 88 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 14 ஓவர்களில் 87 ரன்கள் இன்று சேர்க்கப்பட இவரது பங்களிப்பு அபரிதமானது. ஆண்டர்சனை பவுல்டு செய்து ஸ்டார்க் 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹேசில்வுட் 3 விக்கெட். லயன் 2 விக்கெட். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் 25 ஒவர்களில் 111 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றாமல் ஏமாற்றம் அளித்தார்.
நேற்றைய நாயகன் ஜோ ரூட் 166 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கிடம் ஆட்டமிழந்தார். 43/3 என்ற நிலையில் ஜோ ரூட் களமிறங்கி பிராட் ஹேடின் நழுவவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி இங்கிலாந்தை ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் தொடங்கி கிறிஸ் ராஜர்ஸ் திணறி வருகிறார். பிராட் பந்தில் ஒரு எல்.பி.முறையீடு இன்சைடு எட்ஜினால் தப்பியது, ராஜர்ஸ் பிழைத்தார். அவர் 15 ரன்களுடனும், வார்னர் 25 பந்துகளில் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
மார்க் உட், மற்றும் மொயீன் அலி தலா 1 மெய்டனுடன் தொடங்கியுள்ளனர்.