Published : 17 Oct 2019 07:36 PM
Last Updated : 17 Oct 2019 07:36 PM

தொடரை இழந்த பின் ‘ஒரு கால் விமானத்தில் இருக்கும்’ மனநிலையில் ஆடமாட்டோம்: 3வது டெஸ்ட் ‘டெட் ரப்பர்’ இல்லை எனும் டீன் எல்கர்

எப்போதுமே 3 டெஸ்ட் தொடரில் ஒரு அணி 2-0 என்று முன்னிலை பெற்றுவிட்டால் 3வது டெஸ்ட் போட்டியை ‘டெட் ரப்பர்’ என்று கிரிக்கெட் உலகில் வர்ணிப்பது வழக்கம்.

அதாவது தொடர் முடிந்து விட்டது இனி என்ன? என்ற மனநிலையிலிருந்து எழுவதாகும் இது, ஆனால் ஐசிசி சாம்பியன்ஷிப் என்பதால் 3வது டெஸ்ட்டிலும் 40 புள்ளிகள் பெறும் ஆர்வம் தங்கள் அணிக்கு இருப்பதாக அந்த அணியின் ‘சுவர்’ என்று அழைக்கப்படும் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட் போட்டியை ராஞ்சியில் விளையாடுகிறது, இந்திய அணி 2-0 என்று தொடரை சீல் செய்து விட்டது. அப்போது 3வது டெஸ்ட் ‘டெட் ரப்பரா?’ என்ற கேள்விக்கு டீன் எல்கர் பதிலுரைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

தொடர் யார்பக்கம் என்று முடிவாகியிருக்கலாம். ஆனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 40 இன்னமும் உள்ளது. முன்பெல்லாம் இது ‘டெட் ரப்பர்’போட்டி என்று அழைப்பார்கள். ஆனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று ஆன பிறகே இன்னும் 40 புள்ளிகளுக்காக ஆட வேண்டிய நிலை உள்ளது.

நாங்கள் 40 புள்ளிகளை இந்தியாவுக்கு எதிராக எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறோம், 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததால் அப்படியே தளர்வடைந்து விட்டோம் என்பதல்ல, ஓய்வறையில் அனைவரும் உற்சாகமாகவே இருக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடுவது என்பது அத்தகைய பெருமையளிக்கக் கூடியது

முன்பெல்லாம் 2 டெஸ்ட்களில் தோல்வியடைந்து விட்டால் 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு கால் விமானத்தில் இருக்கும் நிலையில்தான் ஆடுவார்கள் என்ற போக்கு இனி இல்லை. 3வது டெஸ்ட் அவ்வாறு இருக்காது.

மீண்டும் பேட்டிங் அடிப்படைகளுக்குத் திரும்பி நல்ல சவாலை அளிக்கவே திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு கூறினார் டீன் எல்கர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x