

ராஞ்சி
ராஞ்சியில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மார்க்ரமின் வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்தநிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னணி வகிக்கிறது. விசாகப்பட்டிணம், புனேயில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், " இந்தியாவுக்கு எதிராக நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸின் போது மார்க்ரம் ஆட்டமிழந்தார். அப்போது, தான் ஆட்டமிழந்ததை நினைத்து வேதனையடைந்து கனமான பொருள் மீது தனது கையை வீசியுள்ளார் அப்போது அவரின் வலதுமணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இதனால், தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதால் மார்க்ரம் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தவறுக்கு மார்க்ரம் முழு பொறுப்பு ஏற்றுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மார்க்ரம் கூறுகையில், " நான் காயத்தால் எனது சொந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்வது வேதனையாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் என்பதை முழுமையாக அறிந்ததால், அதற்கு நானே பொறுப்பேற்கிறேன். தென் ஆப்பிரிக்கா தோல்வியின் பிடியில் இருக்கும் சூழல் என்னை மிகவும் பாதிக்கிறது.
மற்ற வீரர்களிடம் இருந்தும், இந்த சம்பவத்தில் இருந்தும் ஏராளமானவற்றை அறிந்திருக்கிறேன். விளையாட்டின் உணர்ச்சி வேகம் உச்சத்தில் இருப்பதை புரிந்துகொண்டாலும், சிலநேரங்களில் மனத்தளர்ச்சி என்னைப்போல் செய்யவைத்துவிடும். எனக்கு மன்னிப்பு இல்லை. இந்த காயத்துக்கு முழுப்பொறுப்பு ஏற்கிறேன்" எனத் தெரிவித்தள்ளார்
3-வது டெஸ்ட் போட்டியுடன் தென் ஆப்பிரிக்க பயணம் முடிவடைவதால், மார்க்ரமுக்கு பதிலாக வேறு எந்த வீரரும் சேர்க்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக இதே போல் ஆஸியின் மிட்செல் மார்ஷ் பெர்த் ஓய்வறையில் சுவற்றைத் தன் கையினால் குத்தி காயமடைந்து ஆட முடியாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
, ஐஏஎன்எஸ்