Published : 17 Oct 2019 04:19 PM
Last Updated : 17 Oct 2019 04:19 PM

சாம்பியன்ஸ் டிராபி முடிந்து இலங்கை தொடரில் நான் இல்லை என்று சொன்னார்கள்: மனம் திறக்கும் அஸ்வின்

ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்துக்கு அஸ்வின் அளித்த பேட்டியில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தன்னிடத்தில் கிரிக்கெட் ஆடுவதின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடித்துக் கொள்ள உதவியது என்று கூறியதோடு 2017-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய அணித்தேர்வில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தன்னைப் பாதித்த விதத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீண்ட நேர்காணலில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இனி ஆடப்போவதில்லை என்ற தருணம், சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்து நடைபெற்ற மாற்றங்கள் குறித்து கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் மனம் திறந்தார். அப்போது 2017-ம் ஆண்டு வொர்ஸ்டர்ஷயர் அணிக்காக ஆடச் சென்ற தன் முடிவும், அது ஏற்படுத்திய மாற்றங்களையும் விவரித்தார்.

“2017-ம் ஆண்டு என் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றமும் தாழ்வும் கண்டது. இங்கிலாந்திலிருந்து சாம்பியன்ஸ் ட்ராபி ஆடிவிட்டு திரும்பும் போது இலங்கைத் தொடருக்கு இந்திய அணி செல்லும் வேளையில் அணித்தேர்வாளர்கள் என்னை அழைத்து இலங்கைத் தொடரில் நான் தேர்வு செய்யப்பட மாட்டேன் என்றார்கள். அதாவது வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தப் போவதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, தொந்தரவுக்குள்ளான காலக்கட்டமாக அமைந்தது. அதாவது ஏன் இப்படி நடக்கிறது என்ற பொருளில் எனக்கு தொந்தரவாக இருந்தது. ஏனெனில் இதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த அளவே ஆடினேன், காரணம் டெஸ்ட் போட்டிகளில் என்னை நான் ஒரு முன்னணி பவுலராக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே.

நாட்டுக்காக இன்னும் சிறப்பாக ஆடுவதற்காக நான் தன்னுணர்வுடன் எடுத்த முடிவாகும் அது. திடீரென நான் ஆடும் போட்டிகள் குறையத் தொடங்கின. அனைவரும் என் பவுலிங் புள்ளி விவரங்களைப் பற்றி பேசினர். உயர்மட்ட கிரிக்கெட்டில் முன்னணியில் சிறப்பாக ஆடிவரும் என்னைப்போன்ற ஒரு கிரிக்கெட் வீரருக்கு இதனை புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. எனக்கு இடைவேளை தேவை என்று நினைத்தேன்.

எனவேதான் இங்கிலாந்த் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுவது ஆட்டத்தின் மீதான என் பற்றுதலை மறுகண்டுபிடிப்பு செய்து கொள்ள உதவும் என்று கருதினேன். ஏனெனில் கிரிக்கெட் ஆடுவதன் மீதான மகிழ்ச்சியை கொஞ்சம் இழந்திருந்தேன். இது ஆட்டத்தின் மீதான மகிழ்ச்சியிழப்பு அல்ல, வேறு வேறு இடங்களில் வேறு வேறு காலக்கட்டங்களில் ஆடுவது சலிப்பூட்டியது. எனவே என் மீதான கவனத்திலிருந்து விலகிச் செல்ல கிரிக்கெட்டை கொஞ்சம் ஆடுவோம் என்று முடிவெடுத்தேன். வொர்ஸ்டர் ஷயர் எனக்கு வாய்ப்பளித்தது, இங்கிலாந்து கவுண்ட்டியில் ஆட வாய்ப்புக் கிடைப்பது சுலபமல்ல...

...கடந்த 8-12 மாதங்களாக சில விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்ற பெரிய தொடர்களில் காயமடைந்தேன். காயமடைவதை நான் பெரிதாகக் கருதவில்லை, ஆனால் அதிலிருந்து ஒன்றிரண்டு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

அனைத்து வடிவ வீரர் என்பதிலிருந்து டெஸ்ட் வீரர் என்ற அடையாளத்துக்கு நான் வந்தது எனக்கு ஏற்பட்ட உணர்வினால்தானேயன்றி எனக்கு தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்புகள் அவ்வளவு உறுதியாக இதனைச் சொல்லவில்லை. 2017-ல் நான் சுழற்சி முறையில் வெளியேற்றப்பட்டேன், 2018-ல் நான் ஒராண்டு ஆகிவிட்டது என்பதை அறிந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இனி நான் மீண்டும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்தேன். நான் மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில் இருந்த போது ஒரு நல்ல 12 மாதங்கள் நான் என் பணிச்சுமையை நிர்வகிக்க முயற்சி செய்தேன். 2018-ம் ஆண்டு முடிவை நான் எட்டிய போது, 2019-ற்குள் நுழைந்த போது அனைத்து வடிவங்களிலும் கறாராக ஆடும் வழி இனி இல்லை என்பதை உணர்ந்தேன்.

2009-ல் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தது முதல் 10 ஆண்டுகளாக மிகத்தீவிர களத்தில் நான் தினமும் கிரிக்கெட் ஆடிப் பழகியவன். அனைத்து வடிவங்களிலும் ஆடி வந்தேன். ஆனால் திடீர் மாற்றங்களினால் என் பணிச்சுமை அத்தகைய நிலையிலிருந்து குறைந்தது. எனவே பணிச்சுமையை நிர்வகிக்கும் பணியைத் தவிர்த்தேன்.

மீண்டும் இங்கிலாந்துக்கு வந்த போது என் 10 ஆண்டுகால பணிச்சுமை மீண்டும் எனக்கு வந்தது. அதாவது கடந்த 6-8 மாதங்களாக எனக்கு பணிச்சுமை அவ்வளவாக இல்லாத நிலையில் திடீரென இங்கிலாந்தில் எனது கடந்த 10 ஆண்டு பணிச்சுமை ஏற்பட்ட போது என்னால் சமாளிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்குச் சென்ற போதும் இப்படித்தான் ஆனது, ஏனெனில் அதற்கு முன் தொடர்ச்சியாக ஆடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடியதால் திடீரென அதன் தீவிரத்தை நிர்வகிக்க முடியவில்லை. இது இனி நடக்கக் கூடாது என்று முடிவு கட்டினேன், இனி எங்கிருந்தாலும் மூன்று ஸ்டம்ப் இருந்தால் கிரிக்கெட் ஆட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன். இது என் ஆட்டத்தை நான் மகிழ்வுடன் ஆட முடியச் செய்தது. இங்கிலாந்து கவுண்டி எனக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்தது”

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x