Published : 17 Oct 2019 02:46 PM
Last Updated : 17 Oct 2019 02:46 PM

இதே நாளில் 11 ஆண்டுகளுக்கு முன்பாக வரலாறு படைத்த சச்சின் டெண்டுல்கர் 

இந்தியாவில் குறிப்பாக டெஸ்ட் போட்டியில் புகைமண்டிய மைதானத்தை காண்பது அரிது. ஆனால் சுமார் 24 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கரின் மட்டை ஏற்படுத்திய சரவெடி இல்லாத மைதானங்களே இல்லை என்று கூறலாம்.

ஆம்! அக்.17-ம் தேதி, 11 ஆண்டுகளுக்கு முன்பாக ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் மே.இ.தீவுகளின் பேட்டிங் மேதை பிரையன் லாராவின் 11,953 டெஸ்ட் ரன்களைக் கடந்து 12, 000 டெஸ்ட் ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இந்த டெஸ்ட் போட்டியின் இன்னொரு முக்கியத்துவம் என்னவெனில் சவுரவ் கங்குலி தனது கடைசி டெஸ்ட் தொடரை ஆடினார். கங்குலி ரன்னர் முனையில் இருக்க சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் பந்தை தட்டி விட்டு 3 விரைவு ரன்களை எடுத்து லாரா சாதனையைக் கடந்தார். தேநீர் இடைவேளைக்குச் சற்று பிறகு இந்த வரலாறு நிகழ்த்தப்பட்டது.

இந்த மேஜிக் நம்பரை சச்சின் டெண்டுல்கர் 152 டெஸ்ட் போட்டிகளில் 247 இன்னிங்ஸ்களில் 54.03 என்ற சராசரியுடன் எட்டினார். ஆனால் மே.இ.தீவுகள் பேட்டிங் லெஜண்ட் லாரா 131 டெஸ்ட் போட்டிகளில் இந்த எண்ணிக்கையை எட்டியது குறிப்பிடத்தக்கது.

மொஹாலியில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியின் வரலாற்றுக் கணத்தில் மைதானத்தில் பட்டாசு வெடித்து இந்திய லெஜண்டின் சாதனை கொண்டாடப்பட்டது. ஆஸ்திரேலிய ரசிகர்களிடத்திலும் பிரபலமான சச்சின் டெண்டுல்கரை ஆஸ்திரேலிய வீரர்கள் கைகுலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த காட்சி இன்றும் மனக்கண் முன் நிற்கிறது. இதற்காக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த இன்னிங்ஸில் சச்சின் சதம் எடுக்க முடியாமல் 88 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது கிரிக்கெட் நிபுணர்களும் ரசிகர்களும் இந்த சாதனையை சச்சின் எட்டுவதற்காக நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரிலேயே சச்சின் இந்தச் சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இலங்கை பவுலர்கள் சச்சினை செய்ய விடாமல் தடுத்தனர்.

இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடந்த போது 49 ரன்களில் சச்சின் ஆட்டமிழந்தார், 15 ரன்கள் இன்னும் சாதனைக்குத் தேவைப்பட்டது.

டெண்டுல்கரின் ரன் சக்கரம் 15,921 ரன்களில் நின்றது. 200 டெஸ்ட் போட்டிகளுடன் ரன் இயந்திரம் நிறுத்தப்பட்டது. 2013-ல் சச்சின் ஓய்வு பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x