

கொல்கத்தா
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடப்பது எதுவும் என் கையில் இல்லை. இரு நாட்டு பிரதமர்கள் கையில் இருக்கிறது என்று பிசிசிஐ தலைவராக விரைவில் பதவியேற்க உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடைசியாக 2012-13 ஆம் ஆண்டு ஒருநாள் தொடர் நடந்தது. அதன்பின் இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் ஏதும் நடக்கவில்லை.
உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் ஆகிய போட்டிகளில் மட்டும் இரு நாட்டு அணிகளும் பங்கேற்கின்றன. தவிர ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டுக்குப் பயணம் செய்து கடந்த 7 ஆண்டுகளாக விளையாடவில்லை.
இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழல், பாதுகாப்பு சூழல், தீவிரவாதப் பிரச்சினை காரணமாக கிரிக்கெட் தொடர் நடத்துவது முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில், கிரிக்கெட்டின் கள நிலவரம் தெரிந்த கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக வர உள்ளது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவை மீண்டும் துளிர்க்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் நிருபர்களுக்கு சவுரவ் கங்குலி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று நிருபர்கள் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது என் கையில் இல்லை. இந்தக் கேள்வியை பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் கேட்க வேண்டும்.
நமக்கு இதில் ஆர்வம், அனுமதி கிடைத்தாலும், சர்வதேச அளவில் மற்றொரு நாட்டுக்குப் பயணிக்க அரசுகளின் அனுமதி மிகவும் அவசியம். இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை" என கங்குலி தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமானது. உலகக்கோப்பை போட்டியில் லீக் ஆட்டத்தில் கூட பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது குறித்து ஐசிசிக்கு சிஓஏ கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ