Published : 17 Oct 2019 11:51 AM
Last Updated : 17 Oct 2019 11:51 AM

தோனியின் எதிர்காலம் 24-ம் தேதி முடிவா?- கங்குலி கருத்து 

மகேந்திரசிங் தோனி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : படம் உதவி ட்விட்டர்

கொல்கத்தா

மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து வரும் 24-ம் தேதி தேர்வுக் குழுவினருடனான சந்திப்பின்போது பேசுவேன் என்று பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதன்பின் இந்திய அணியில் தோனி விளையாடவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர் ஆகியவற்றில் தோனி தாமாகவே முன்வந்து விலகிக்கொண்டார். இதற்கிடையே ராணுவத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 நாட்கள் வரை தோனி பயிற்சி மேற்கொண்டார்.

தோனியின் பேட்டிங் குறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறுவிதமான விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியிலும் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தோனியின் ஆட்டம் குறித்து பரவலாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதனால், தோனி நீண்டகாலமாக ஓய்வில் இருப்பதால் அவர் ஓய்வு குறித்த சர்ச்சைகளும், ஓய்வு ஏன் அறிவிக்கக்கூடாது என்ற கேள்விகளும் பலவாறு எழுந்தன.

இந்நிலையில் நவம்பர் மாதம் வங்கதேசம், இந்திய அணிகளுக்கு இடையே 3 டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடபெற உள்ளது. இதற்கான அணித் தேர்வு வரும் 24-ம் தேதி நடக்கிறது. இந்தத் தொடரில் தோனி இடம் பெறுவதும் சந்தேகம் எனத் தெரிகிறது. அப்போது தோனியின் எதிர்காலம் என்ன ஆகும் எனத் தெரியவரும்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவராக வர உள்ள சவுரவ் கங்குலியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறுகையில், "நான் 24-ம் தேதி இந்திய அணியின் தேர்வுக்குழுவினரைச் சந்திக்க இருக்கிறேன். அவர்களைச் சந்திககும்போது தோனி குறித்து அவர்கள் என்ன நினைத்திருக்கிறார்கள், கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதன்பின் தோனியின் எதிர்காலம் குறித்து எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்" என்றார்.

ஒரு அணியின் வீரர் எவ்விதக் காரணமும் இன்றி நீண்ட விடுப்பில் இருப்பது குறித்து கங்குலியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், "தோனி ஏன் ஓய்வில் இருக்கிறார், எதற்காக ஓய்வில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. வரும் 24-ம் தேதி தேர்வுக் குழுவினரை நான் சந்தித்துப் பேசுகிறேன். அதன்பின் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். தோனிக்கு என்ன தேவை என்பதையும் அறிய வேண்டும்.

இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவதில் எனக்கு அதிகமான விருப்பம். அதற்கான முயற்சிகளை எடுப்பேன். அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது இப்போதே கூறுவது கடினம். ஒவ்வொரு உறுப்பினருடன் கலந்தாய்வு செய்த பின் முடிவு எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பிசிசிஐ தலைவரான பிறகு, கங்குலி முதல் முறையாக கேப்டன் கோலியை வரும் 24-ம் தேதி சந்திக்க உள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x