சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்: ஐசிசி முடிவுக்கு சச்சின் வரவேற்பு
புதுடெல்லி
சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்ததற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த மே முதல் ஜூலை மாதம் வரை நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் சேர்த்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அப்போதும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதனை அடுத்து இறுதிப்போட்டியில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு அதில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு கடும் விமர்சனம் கிளம்பியது.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இனிமேல் சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது. அதாவது ஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட் டால் சூப்பர் ஓவர் முறை கடைப் பிடிக்கப்படும்.
அதேநேரத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று ஐ.சி.சி. அறிவித் துள்ளது. இந்த முடிவுக்கு இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறும்போது, “இது ஒரு முக்கியமான முடிவு என்று நான் கருதுகிறேன். இரு அணிகள் சமநிலை வகிக்கும்போது முடிவு கிடைக்கும்வரை சூப்பர் ஓவரைத் தொடர்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.
இதுதொடர்பாக ஐசிசி தனது விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறேன்” என்றார். மற்றொரு ட்விட்டர் பதிவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக பொறுப்பேற்கவுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் அவர் கூறும்போது, “பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக சவுரவ் கங்குலிக்கு வாழ்த்துகள். நீங்கள் தொடர்ந்து இந்திய கிரிக் கெட்டுக்கு சேவை செய்யவேண் டும். பிசிசிஐ புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்கப் போகும் நிர்வாகி களுக்கு எனது வாழ்த்துகள்” என்றார் சச்சின்.
- பிடிஐ
