Published : 13 Jul 2015 03:40 PM
Last Updated : 13 Jul 2015 03:40 PM

வங்கதேச ஆக்ரோஷத்துக்கு தப்ப முடியாத தென் ஆப்பிரிக்கா தோல்வி

மிர்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி தனது சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டி பிறகு இலக்கை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. முதல் போட்டியில் ஹாட்ரிக்குடன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய ஒருநாள் சாதனை நிகழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாதாவை வங்கதேசத்தின் சவுமியா சர்க்கார், லிட்டன் தாஸ், மஹமுதுல்லா ஆகியோர் பழிக்குப் பழியாய் பின்னி எடுக்க அவர் 7 ஓவர்களில் 45 ரன்களை கொடுக்க நேர்ந்தது.

தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லாத அணி வங்கதேசத்தின் அபாரமான பந்துவீச்சுக்கு 46 ஓவர்களில் 162 ரன்களுக்குச் சுருண்டது. முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ஓவர்கள் 1 மெய்டன் 38 ரன்களுக்கு 3 விக்கெட் என்று மீண்டும் அசத்தினார்.

ரூபல் ஹுசைன் 2, நசீர் ஹுசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 27.4 ஓவர்களில் 167/3 என்று அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது. சவுமியா சர்க்கார் 79 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 88 ரன்களையும், மஹ்முதுல்லா 64 பந்துகளீல் 50 ரன்களையும் எடுத்து 135 ரன்களை சுமார் 22 ஓவர்களில் ஜோடி சேர்ந்து எடுத்து அபார வெற்றி பெறச் செய்தனர்.

2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு மீண்டும் வங்கதேசம் அந்த அணியை வீழ்த்தியுள்ளது. மந்தமான பிட்சில் வங்கதேச வேக மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை கடுமையாக நெருக்கினர், ரன்கள் எடுப்பது கடும் சிரமமாக இருந்தது, மாறாக தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சை சவுமியா சர்க்கார் மற்றும் மஹ்முதுல்லா மிகவும் சுதந்திரமாக ஆடினர்.

தொடர்ந்து தங்களது மாறுபடும் பந்துகள் மூலம் ரன் எடுப்பதை வெகுவாகக் குறைத்த வங்கதேச வீச்சாளர்கள் அதனால் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் வெறுப்பில் தவறான ஷாட்களை தேர்வு செய்ய வைத்து வெற்றி கண்டனர். தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென்கள் ஜோடி சேர்ந்து அதிகபட்சமாக எந்த ஒரு விக்கெட்டுக்கும் 30 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை என்பதே எதார்த்தம். குவிண்டன் டி காக்கிற்கு முஸ்தபிசுர் வீசிய பந்து அற்புதமானது, ஷார்ட் பிட்ச் லெந்திலிருந்து எழும்பிய பந்தினால் தனது நிலையிலிருந்து முற்றிலும் நேராகாத் திரும்பிய டி காக் மட்டையின் மேல் பகுதியில் பட்டு பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் ஆனது.

அதன் பிறகு ஆம்லா, டுபிளெஸ்ஸிஸ் 29 ரன்களைச் சேர்த்தனர், இதுதான் அவர்கள் இன்னிங்சில் அதிகபட்ச ஜோடி ரன்கள். ஆம்லாவின் ஸ்டம்ப்களை பெயர்த்தார் ரூபல் ஹுசைன். இவர் முதலில் 2 ,மெய்டன்களுடன் தொடங்கி நெருக்கடியை தொடங்கி வைக்க, ஷாகிப் அல் ஹசன், ரைலி ரூஸோவை கடும் நெருக்கடிக்குள்ளாக்க ரன்களே வரவில்லை. கடும் குழப்பத்தில் இருந்த ரூசோவ் கடைசியில் நசீர் ஹுசைனின் நேர் பந்துக்கு பவுல்டு ஆனார்.

டேவிட் மில்லர், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டுமினி ஆகியோர் ஷார்ட் தேர்வின் தோல்வியினால் ஆட்டமிழந்தனர். டுபிளெஸ்ஸிஸ் அதிகபட்சமாக 64 பந்துகளில் 41 எடுத்து நெருக்கடியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசியில் பெஹார்டீன் (36), கிறிஸ் மோரிஸ் (12), ரபாதா (10) ஆகியோர் மூலம் ஸ்கோர் ஒரு வழியாக 100/6 என்ற நிலையிலிருந்து 162 வரை வந்தது.

இலக்கைத் துரத்திய போது புதிய வேகப்புயல் ரபாதா, தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோரை பவுல்டு செய்ய வங்கதேசம் 24/2 என்று ஆனது.

சவுமியா சர்க்காரின் சாதுரியமான தாக்குதல் ஆட்டம்:

கைல் அபாட், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் நேர் நேர் தேமாவாக வீசுவார்கள் என்பதை அறிந்த சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா அவர்கள் இருவரையும் அடித்து ஆடினர். 47 பந்துகளில் சவுமியா தனது அரைசதத்தை எட்டினார். தென் ஆப்பிரிக்கா திணறிய அளவுக்கு பிட்ச் இல்லையோ என்பது போல் இருந்தது இருவரது ஆட்டமும்,

சவுமியா சர்க்கார் மட்டும் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவின் அனைத்து வீரர்களும் சேர்ந்து அடித்தது 14 பவுண்டரி ஒரு சிக்ஸ் என்பதும் கவனிக்கத்தக்கது. டுமினியையும் இருவரும் விளாசினர். இம்ரான் தாஹிரும் தப்பவில்லை. இவரை 2 பவுண்டரிகள் விளாசி பிறகு ஸ்வீப் சிக்ஸ் அடித்தார் சவுமியா சர்க்கார்.

ரபாதா தொடக்கத்தில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசி சோதிக்க லிட்டன் தாஸ் லாங் லெக் மீது ஒரு அபார சிக்ஸை அடித்து ஆச்சரியப்படுத்தினார். பிறகு பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் அடித்த பவுண்டரியும் அபாரம். ஆனால் அதே ஓவரில் ஃபுல் பந்து ஒன்றை வீச அடிக்கப் போன லிட்டன் பவுல்டு ஆனார். மஹ்முதுல்லா இறங்கியவுடனேயே ரபாதாவை பவுண்டரி அடித்தார். மீண்டும் 23-வது ஓவரில் ரபாதா வர, ரபாதா பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டுக்கும் மிடானுக்கும் இடையே பவுண்டரி விளாசினார் மஹமுதுல்லா, அதே ஓவரில் சவுமியா சர்க்கார் புல் ஷாட்டில் ஒரு பவுண்டரி விளாசினார்.

முதல் போட்டியில் அச்சுறுத்தியவர் என்ற அச்சம் துளிக்கூட இல்லாமல் அவர் பந்துகளையும் அடித்து ஆடினர் வங்கதேச பேட்ஸ்மென்கள். இம்ரான் தாஹிரை சிக்ஸ் அடித்து வெற்றி ரன்களை எடுத்தார் சவுமியா சர்க்கார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

20 ஓவர்கள் பக்கம் மீதமிருக்க வங்கதேசம் பெற்ற வெற்றி, டெஸ்ட் அணிக்கு எதிராக பெறும் பெரிய வெற்றியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x