Published : 27 Jul 2015 09:52 AM
Last Updated : 27 Jul 2015 09:52 AM

புத்துயிர் பெறும் வங்கதேச அணி: கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெருமிதம்

சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் மீதான விமர்சனமாக இருக்குமே தவிர, வங்கதசேத்தின் வெற்றி குறித்ததாக இருக்காது.

ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. தன் இருப்பை கொஞ்சம் உரத்தே வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். இது அந்நாட்டு அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் நல்லதுதான்.

சமீபத்தில் வங்கதேசம் சென்ற இந்திய அணி, முதலிரு ஒருநாள் போட்டிகளில் தோற்றது. வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதன்முறையாக வென்றது. அதுவரை அசமந்தமாக இருந்த இந்தியாவுக்கு அது சாட்டையடி.. உடனடியாக அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணியில் பழம்பெருமைக்காக தொங்கிக் கொண்டிருந்த சிலருக்கு ஓய்வளிக்கப்பட்டது. மூன்றாவது போட்டியில் வென்றபோதும் இந்தியாவுக்கு அது ஆறுதல் வெற்றி அவ்வளவே.

அடுத்து, டி-20 போட்டியிலும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது வங்கதேசம்.

இந்தியாதான் இப்படி என்றால், தற்போது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியையும் அசைத்துப் பார்த்திருக்கிறது வங்கதேசம்.

சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வலுவான அணியான தென்னாப்பிரிக்காவை 248 ரன்களுக்குள் வங்கதேச பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். 2-வதாக பேட் செய்து 78 ரன்கள் முன்னிலை பெற்றது வங்கதேசம்.

ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இந்தியாவைத் திணறடித்த முஸ்தாபிஸுர் ரஹ்மான், டெஸ்ட் போட்டிக்கும் தன்னை விரைவாகவே தயார் படுத்திக் கொண்டார். ஆம்லா, டுமினி, டிஹாக் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் உட்பட 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வங்கதேச பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டை அந்த அணியின் கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் வெகுவாக பாராட்டியுள்ளார்.

முகமது ஷாஹித், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால், தொடர்ந்து 7 மெய்டன் ஓவர்களை அவர் வீசினார். தனது 6-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர் முடிய அவர் 50 பந்துகளை, ரன் கொடுக்காமல் வீசினார்.

வங்கதேச பந்துவீச்சாளர்கள் தொடர்பாக முஸ்பிகுர் இஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஷாஹித்தின் 7 மெய்டன் ஓவர்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமளித்தன. இதுபோன்ற பிளாட்டான பிட்ச்சில், இந்த அளவுக்கு பந்துவீசுபவர்கள் உலகிலேயே மிகச்சிலர்தான். இம்முறை அவருக்கு விக்கெட் கிடைக்காமல் இருக்கலாம். இரு கேட்சுகள் விடப்பட்டன. ஆனால், அடுத்த போட்டியில் அதுபோன்ற கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிடாமல் அவருக்கு விக்கெட் கிடைக்கச் செய்வோம்.

முஸ்தாபிஸுரின் பந்துவீச்சு அபாரம். அவர் டெஸ்ட் போட்டிக்கு உடனடியாக தன்னைத் தகவமைத்துக் கொண்டார். நான்கு பந்துகளில் ஆம்லா, டுமினி, டி ஹாக் ஆகியோரை வீழ்த்தி ஆட்டத்தை எங்கள் வசம் கொண்டு வந்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள புதிய வீரர்கள் முஸ்தாபிஸுரை எதிர்கொள்ள திணறுகிறார்கள். அடுத்த போட்டியிலும் முஸ்தாபிஸுர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஒரு நாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்துவது அவருக்கு எளிதாக இருக்கிறதாம்.

7 பேட்ஸ்மேன்கள் , 4 பந்து வீச்சாளர்கள் என்ற இந்தக் கலவை எங்களுக்கு நல்ல பலனை அளித்திருக்கிறது. உலகின் சிறந்த அணிகள் இந்தக் கலவையில்தான் அமைந்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட்டை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறது வங்கதேசம். கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு இது 2-வது இன்னிங்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x