

புதுடெல்லி, பிடிஐ
தென் ஆப்பிரிக்க வளரும் நட்சத்திர பவுலர் லுங்கி இங்கிடி, தன் சிறுபிராய ஏழ்மை, கிடைத்த உதவிகள், ரபாடாவுடனான நட்பு, ஷாரூக்கானின் லுங்கி டான்ஸ் ஆகியவை பற்றி உற்சாகமாகப் பேட்டி அளித்துள்ளார்.
ஆம், தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடிக்கு வாழ்க்கை பூக்களின் படுக்கையினால் ஆனதல்ல, அது ரோஜாக்களின் முட்களாகவே இருந்துள்ளது. ஆனாலும் கிரிக்கெட் பிட்சில் சமூக ரீதியாகவோ, பணம், அந்தஸ்து குறித்தோ சமத்துவமற்ற பார்வைகளினால் தான் பாதிக்கப்படவில்லை என்கிறார் அவர்.
ஏழ்மையை மிகவும் நெருக்கமாக அனுபவித்தவர் லுங்கி இங்கிடி. ஆனாலும் கிரிக்கெட்டில் அவரது வளர்ச்சியை அவரது சமூக நிலையோ, வர்க்க நிலையோ தடைக்கற்களாக அமையவில்லை.
“சிறுபிராயம் முதலே என் பெற்றோரிடம் பணம் காசு கிடையாது, வசதியில்லாதவர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நானும் என் தேவைகளை வலியுறுத்தி அவர்களால் எனக்கு வாங்கித் தர முடியாததை வாங்கித் தரக்கோரி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. என்ன அவர்களால் எனக்கு செய்ய முடிந்ததோ அதுவே எனக்கு பரம திருப்தியாக இருந்தது.
ஆரம்பத்தில் போராட்டம்தான், ஆனால் நான் படித்த பள்ளியில் என் சகாக்களின் பெற்றோர் எனக்கு சகல உதவிகளையும் செய்தனர், கிரிக்கெட் உபகரணங்கள் உட்பட பல்வேரு உதவிகளை என் சகாக்களின் பெற்றோர் எனக்குச் செய்துள்ளனர். நான் அவர்களுக்கு இன்றும் என்றும் நன்றிக்கடன் பட்டவனாகவே இருக்கிறேன்” என்றார்.
இங்கிடி போலவே ரபாடாவும் ஆப்பிரிக்க கருப்பரினத்தைச் சேர்ந்தவர்கள் நிறவெறிக் காலத்துக்குப் பிறகு பிறந்தவர்கள். ஆனால் இங்கிடி அளவுக்கு ரபாடா வசதியில்லாதவர் கிடையாது, வசதியான பின்னணி ரபாடாவுக்கு உண்டு.
“நானும் ரபாடாவும் பள்ளியில் ஒன்றாகவே கிரிக்கெட் ஆடினோம், இப்போது அதை நினைக்கும் போது, சர்வதேச கிரிக்கெட்டிலும் சேர்ந்து ஆடுகிறோம் என்பது பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எங்கள் இருவருக்குமான நட்பு எப்பவும் போல் உள்ளது.
கிரிக்கெட் ஆடத்தொடங்கி விட்டால் அனைவரும் சமமே. அங்கு என் பிறப்பு, அந்தஸ்து ஆகியவை என் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லை. என் அந்தஸ்து நான் பேட் பிடிக்கும் விதத்தையோ பவுலிங் வீசும் விதத்தையோ தீர்மானிக்கவில்லை.
கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்ததே இதுதான். நான் ஒரு நபராக எந்த பின்னணி, அடையாளத்திலிருந்து வௌர்கிறேன் என்பதை விளக்குவதில்லை. திறமைதான் இங்கு பேசும், ரபாடா இப்போது எவ்வளவு பெரிய வீரராக இருக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது.
சிஎஸ்கேவுடன் என் குறுகிய காலத்தை மகிழ்வுடன் கழித்தேன், நிறைய ரசிகர்கள் எனக்கு அப்பொது நிறைய செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். அனைவருக்கு நன்றி.
சிஎஸ்கேவுக்கு ஆடும்போது லுங்கி டான்ஸ் பாடல் பிரசித்தமானது. நான் மைதானத்தில் இருக்கும் போது அந்தப்பாடலை நிறைய ஒலிபரப்புவார்கள்.
அந்தப் பாடலின் வீடியோவைப் பார்த்துள்ளேன், ஷாரூக்கானைப் பார்த்தேன், அவர் கேகேஆர், நாங்கள் அவரது அணியை எதிர்த்து ஆட வேண்டும். ஆனால் அது ஒரு நல்ல பாடல்தான்.
இவ்வாறு கூறினர் லுங்கி இங்கிடி.