Published : 16 Oct 2019 06:51 PM
Last Updated : 16 Oct 2019 06:51 PM

அஸ்வின் எதிர்காலம் என்ன? -  முடிவு எப்போது எட்டப்படும்- கும்ப்ளே பதில் 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்ட அனில் கும்ப்ளே, கிங்ஸ் லெவன் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அஸ்வின் கொடுக்கப்படுவார் என்ற செய்தி 2 நாட்களுக்கு முன் கிங்ஸ் லெவன் உரிமையாளர் நெஸ் வாடியா மூலம் அஸ்வினை டெல்லி கேப்பிடல்சுக்கு கொடுப்பதாக இல்லை என்பதாக மாறியுள்ளது.

“இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை, இப்போதுதான் வந்துள்ளேன், என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை முறையாகத் தெரியப்படுத்துவோம். எந்த வீரர்கள் அணியில் நீடிப்பார்கள், யார் பிற அணிகளுக்கு அனுப்பப்படுவார்கள் போன்ற விவரங்கள் குறித்து நான் இன்னும் பார்வையிடவில்லை.

அஸ்வின் நீடிப்பாரா என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம், நான் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். பல காரணிகளையும் பரிசீலித்த பிறகு முடிவெடுப்போம் அதனை முறைப்படி தெரிவிப்போம்.

அனைத்துக் கோணங்களிலிருந்தும் அணியை வலுப்படுத்துவதுதான் இப்போதைய கவனம். லட்சிய அணி என்று எதுவும் கிடையாது ஏனெனில் ஏலத்தில் நாம் விரும்பும் வீரர்கள் கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லை. ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும், அணியில் கொஞ்சம் அனுபவ வீரர்கள் தேவை என்றே நினைக்கிறேன்.

டி20யில் எதுவும் சுலபமல்ல, இரு அணிகளுக்குமான இடைவெளி மிகச்சிறியது. அனுபவம் மட்டுமல்ல, திறமையும் முக்கியம். அனைத்து சீசன்களிலும் சீராக ஆடும் அணியை நான் விரும்புகிறேன்.

நடுவரிசையில் கொஞ்சம் இடைவெளி உள்ளது அதை பூர்த்தி செய்ய வேண்டும். வரிசையில் ஒரு இடம் பற்றியது மட்டுமல்ல இது. திறமையான வீரர்கள் அணியில் இருக்கின்றனர். எலம் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. இன்னும் நேரம் இருக்கிறது. நான் இப்போதுதான் வந்துள்ளேன், எனக்கு இன்னும் கால அவகாசம் தேவை.

இவ்வாறு கூறினார் கும்ப்ளே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x