வரலாறு படைத்த மும்பை வீரர் ஜெய்ஸ்வால் யார்? - பானிபூரி விற்று, தெரு உணவுவிடுதியில் பணியாற்றி டெண்ட்களில் உறங்கி...

வரலாறு படைத்த மும்பை வீரர் ஜெய்ஸ்வால் யார்? - பானிபூரி விற்று, தெரு உணவுவிடுதியில் பணியாற்றி டெண்ட்களில் உறங்கி...
Updated on
2 min read

ஜார்கண்ட் அணிக்கு எதிராக புதனன்று 154 பந்துகளில் 203 ரன்களை 17 பவுண்டரிகள் 12 சிக்சர்களுடன் விளாசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என்ற மும்பை இளம் வீரர் மிக இளம் வயதில் லிஸ்ட் ஏ இரட்டைச் சதம் எடுத்த வீரர் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.

200 ரன்களை 149 பந்துகளில் எட்டினார் இடது கை வீரரான ஜெய்ஸ்வால். இத்தனைக்கும் ஜார்கண்ட் அணியில் இந்தியாவின் அதிவேகப் பவுலராக ஒருகாலத்தில் திகழ்ந்த வருண் ஆரோன் இருக்கிறார். அனுகுல் ராய், ஷாபாஸ் நதீம் ஆகிய டைட்டாக வீசும் வீச்சாளர்களும் உள்லனர்.

17 வருடங்கள் 292 நாட்கள் ஆகும் ஜெய்ஸ்வால் 20வயது 275 நாட்களில் லிஸ்ட் ஏ இரட்டைச் சதம் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ஆலன் பாரோவின் சாதனையை முறியடித்தார்.

இவரது கதை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்தாலும் அந்த நிலையிலிருந்து போட்டி நிறைந்த மும்பை சீனியர் அணியில் நுழைய முடிந்திருக்கிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல.

முதன் முதலாக கடந்த ஆண்டு டாக்காவில் நடந்த யு-19 ஆசியக் கோப்பையில் மூலம் ஜெய்ஸ்வால் பிரபலமானார். இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை 144 ரன்களில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றிய போட்டியில் ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் 318 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார்.

மிகச் சமீபமாக இங்கிலாந்தில் நடந்த யு-19 முத்தரப்பு தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 294 ரன்களை எடுத்தார். 4 அரைசதங்கள் இதில் இறுதிப் போட்டியில் 72 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.

இவரது பின்னணி மிகவும் ஏழ்மையானது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாதோஹியில் சிறு கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் தந்தைக்கு மகனாகப் பிறந்தவர் ஜெய்ஸ்வால். கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் காரணமாக மும்பைக்கு வந்துவிட்டார். வந்த போது இவர் மிகவும் கஷ்டப்பட்டார், இரவுகளில் பால்பொருள் விற்பனை கடையில் படுத்து உறங்கினார், ஆனால் அங்கிருந்து வெளியே அனுப்பப்பட்டார். பிறகு முஸ்லிம் யுனைடெட் கிளப் மைதான ஊழியர்களுடன் ஆசாத் மைதானத்தில் டெண்ட்களில் வாழ்க்கையைக் கழித்தார். வாழ்வாதாரத்துக்காக பானிபூரி விற்றுள்ளார். தெருவில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் பணியாற்றியுள்ளார்.

பிற்பாடு உள்ளூர் பயிற்சியாளர் ஜ்வாலா சிங் இவருக்கு உதவினார்.

ஜ்வாலா சிங் இவர் பற்றிக் கூறும்போது, “ஜெய்ஸ்வாலை முதன் முதலில் பார்த்த போது அவருக்கு 11-12 வயதிருக்கும். இவரது பேட்டிங் என்னை மிகவும் ஈர்த்தது. ஏ-டிவிஷன் பவுலர்களையெல்லாம் இவர் அனாயசமாக ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அப்போதுதான் என் நண்பர் ஒருவர் ஜெய்ஸ்வால் படும் கஷ்டங்களைக் கூறினார், அவர் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகக் கூறினார். பயிற்சியாளர் இல்லை பெற்றோரும் இங்கு இல்லை என்று என்னிடம் தெரிவித்தார” என்றார். ஜ்வாலா சிங் அவருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ததோடு பயிற்சியாளராகவும் உதவி செய்தார்.

மேலும் ஜ்வாலா சிங் கூறும்போது, “பெரிய ஸ்கோராகத்தான் ஜெய்ஸ்வால் எடுக்கிறார், நிச்சயம் ஒருநாள் இந்திய அணியில் ஆடுவார் என்று நான் உறுதிபட நம்புகிறேன்” என்றார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுவது என்னவெனில், “நான் கிரிக்கெட் ஆட வேண்டும், அதுவும் மும்பையில்தான் ஆட வேண்டும் என்று நினைத்தேன். நான் டெண்டில்தான் இருந்தேன், அங்கு மின்சாரம், டாய்லெட் வசதிகள் இல்லை, மிகவும் கடினமாக இருந்தது. எனவே என் தேவைகளுக்காக நான் வேலை செய்யத் தொடங்கினேன். தெருவில் சிற்றுண்டிசாலை வைத்திருந்தவரிடம் வேலை செய்தேன். அப்படி வேலை செய்யும் போது என் சக வீரர்களும் அந்தக் கடைக்கு சாப்பிட வருவார்கள். அவர்களுக்கும் உணவு கொடுப்பேன் பானி பூரி கொடுப்பேன். எனக்கு இது ஒருமாதிரியாக இருந்தாலும் தேவையைக் கருதி வேலை செய்தேன்.

இலங்கைக்கு எதிராக முதல் தொடரில் நிறையக் கற்றுக் கொண்டேன். முதல் 2 போட்டிகளில் நாங்கள் சரியாக ஆடவில்லை. அதன் பிறகு நெருக்கடிகளை சமாளிப்பது எப்படி என்பதைக் கற்றேன்.

சச்சின் சார், ஜ்வாலா சார் ஆகியோர் என்னிடம் கூறும்போது இது ஆரம்பம்தான் என்றனர்” என்றார்.

தொடக்கத்திலேயே முடிந்த வினோத் காம்ப்ளி போல் அல்லாமல் ஜெய்ஸ்வாலின் கரியர் மேலும் ஜொலித்து இந்திய அணியில் நீண்ட காலம் ஆடும் வாய்ப்பை பெற வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in