Published : 16 Oct 2019 11:07 AM
Last Updated : 16 Oct 2019 11:07 AM

தமிழனாய் வாழ்வது எனது பெருமை: விமர்சனத்துக்குப் பதிலளித்த மிதாலி ராஜ்

தன்னை விமர்சித்த நெட்டிசனுக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ், தமிழனாய் வாழ்வது எனது பெருமை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் இதில் ஆடியதன் மூலம் தொடர்ந்து 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்தார்.

இதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் சச்சின் டெண்டுல்கரின் பதிவைக் குறிப்பிட்டு மிதாலி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.

இதில் நெட்டிசன் ஒருவர் மிதாலியின் பதிவில் ”இவருக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் மட்டும் பேசுவார்” என்று விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு மிதாலி, ''தமிழ் என் தாய்மொழி.. நான் நன்றாகத் தமிழ் பேசுவேன்.
தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் எனது அனைத்துப் பதிவுகளிலும் என்னைக் குறை கூறுகிறீர்கள்” என்று பதில் அளித்தார்.

மேலும். பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டட்டின் ‘ You Need To Calm Down’ பாடலை அந்த நெட்டிசனுக்கு மிதாலி அர்ப்பணித்தார்.

தனக்கு எதிரான விமர்சனத்தை, மிதாலி ராஜ் பக்குவமாக அணுகினார் என்று பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x