Published : 15 Oct 2019 03:37 PM
Last Updated : 15 Oct 2019 03:37 PM

கோலி தலைமை பிரமாதம்.. ஆனால் அயல்நாடுகளில் ஸ்டீவ் வாஹ், பாண்டிங் போன்று வெற்றிகளை எட்டுவது கடினம்: ஷேன் வாட்சன் கருத்து 

அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியை விராட் கோலி மிகப்பிரமாதமாக வழிநடத்துகிறார் என்று ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்

திங்களன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷேன் வாட்சன் கூறியதாவது:

இந்திய அணிக்காக மிகப்பெரிய அளவில் கோலி பணியாற்றி வருகிறார். அனைத்து வடிவங்களிலும் அவரே சிறப்பாக ஆடிவருகிறார். இப்போது அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அணி வீரர்களும் கோலி தலைமைக்கு சரியாக வினையாற்றுகின்றனர்.

அனைத்து புலங்களிலும் இந்திய அணியில் ஆழ்மை உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் இந்திய அணி வலுவாகத் திகழ்கிறது. ரோஹித் சர்மா போன்ற ஒருவர் தொடக்கத்தில் இறங்கி ரன்களைக் குவிக்கும் ஒரு பலம் இந்திய அணிக்கு இருக்கிறது.

இந்திய அணியின் அனைத்துப் புல ஆழ்மையினால் அயல்நாடுகளிலும் தொடர்களை வெல்ல முடியும். அயல்நாட்டுத் தொடர்களில் ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா வெல்வதை விராட் கோலி அப்படியே பிரதிபலிப்பது கடினம், ஆனால் இந்தியாவினால் அவ்வாறு வெல்ல முடியாது என்று கூறுவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.

இவ்வாறு கூறினார் ஷேன் வாட்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x