Published : 14 Oct 2019 05:24 PM
Last Updated : 14 Oct 2019 05:24 PM

பிசிசிஐ தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்ற கங்குலி; அதிர்ச்சியளித்த தேர்தல் அதிகாரி

புதுடெல்லி

பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று சென்றபோது, அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வேட்புமனுவை பிசிசிஐ சட்டவல்லுநர் குழுவிடம் ஒப்படைத்து கங்குலி சென்றார்.

பிசிசிஐ தலைவர், நிர்வாகிகள் குழுத் தேர்தலை வரும் 23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று சிஓஏ தெரிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசிநாளாகும்.

கருத்தொற்றுமை அடிப்படையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எந்த வேட்பாளரும் போட்டியிடவில்லை என்பதால் கங்குலியே தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

பிசிசிஐ தேர்தல் அதிகாரியாக என். கோபாலசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனுத்தாக்கல் செய்ய காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரை என்று நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய கங்குலி உள்ளிட்டோர் இன்று நண்பகல் 2 மணிக்கு மேல் சென்றனர்.

பிசிசிஐ அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கோபாலசாமியின் அறைக்குச் சென்றபோது அவர் அறையில் இல்லை. இதனால், வேட்புமனுவுடன் நீண்டநேரம் கங்குலி உள்ளிட்டோர் காத்திருந்தனர்.

ஆனால், மணியும் 2.45 மணி ஆகியது, வேட்புமனுத் தாக்கல் செய்ய 3 மணிவரை கடைசி. இதையடுத்து, கங்குலியுடன் வந்திருந்த சிலர் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தேர்தல் அதிகாரி கோபாலசாமி இன்று விடுமுறை எடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதை கங்குலியிடம் அவர்கள் சொன்னபோது அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். வேட்புமனுத் தாக்கலுக்கு 3 மணிவரைதான் கடைசி. ஆனால் மணி 2.50 ஆகிவிட்டது, தேர்தல் அதிகாரியும் இல்லை என்பதால் அனைவரும் சற்று குழப்பமும், பதற்றமும் அடைந்தனர்.

இதையடுத்து, அங்கு இருந்த பிசிசிஐ சட்டவல்லுநர்கள் குழுவிடம் ஆலோசித்து சட்ட வல்லுநர்கள் குழுவிடமே கங்குலி தனது வேட்புமனுவை தாக்கல் செய்து அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டார்

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், " பிசிசிஐ தேர்தல் வேட்புமனுவுக்கு இன்றுதான்கடைசி நாள். இன்றுதேர்தல் அதிகாரி வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை எனத் தெரியவி்ல்லை. நீண்டநேரம் காத்திருந்த கங்குலி, வேட்புமனுத் தாக்கலுக்கு நேரம் நெருங்கிவிட்டதால், பிசிசிஐ சட்டவல்லுநர்கள் குழுவிடம் மனுவைவழங்கிவிட்டு சென்றார்" எனத் தெரிவித்தார்


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x