Published : 14 Oct 2019 11:28 AM
Last Updated : 14 Oct 2019 11:28 AM

பிசிசிஐ தலைவரானால் முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனில், கவனத்தில் முன்னுரிமை: கங்குலி பேச்சு

மும்பை

பிசிசிஐ தலைவரானால், முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனில் அக்கறை காட்டுவதுதான் முன்னுரிமையாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) தேர்தல் நடத்த வரும் 23-ம் தேதி கடைசித் தேதியாகும். இன்று மாலை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்பு சார்பில் கருத்தொற்றுமை அடிப்படையில் பொதுவேட்பாளராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை தலைவர் பதவிக்கு கங்குலி மட்டும் மனுத்தாக்கல் செய்தால் அவர்தான் அடுத்த தலைவராக வருவார். அது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

இதற்கிடையே மும்பையில் இன்று நிருபர்களுக்கு சவுரவ் கங்குலி பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் நீங்கள்தான் அடுத்த பிசிசிஐ தலைவர் என்று கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு கங்குலி அளித்த பதில் அளித்துப் பேசுகையில், " இன்று மாலை 3 மணிவரை பொறுமையாக இருங்கள். அதன்பின் பார்க்கலாம். உண்மையில் நாட்டுக்காக விளையாடி இருப்பதும், நாட்டின் அணிக்காக கேப்டனாக இருந்ததும் பெருமையான தருணம்.

ஒருவேளை நான் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றால் இது மிகவும் இக்கட்டான காலம். கடந்த 3 ஆண்டுகளாக பிசிசிஐ வளர்ச்சி சிறப்பாக இல்லை.

பிசிசிஐக்கு அதிகமான தடைகள் வந்தன. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் நான் தலைவராக வரும்போது, ஏதோ என்னால் பல நல்ல செயல்கள் செய்வதற்கு அதிகமான வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கும்.

நான் தலைவராகப் பொறுப்பேற்றால், என்னுடைய முதல் கவனம், முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனில் அக்கறை செலுத்துவதாகத்தான் இருக்கும்.

கடந்த 33 மாதங்களாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவினர் எதையும் செய்யவில்லை, அவர்களிடம் பலமுறை முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனுக்காக நான் கோரிக்கை விடுத்தும் எதையும் காதில் வாங்கவில்லை. தலைவராக வந்தபின், முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களின் ஊதியம் குறித்துப் பேசி நல்ல முடிவு எடுப்பேன்.

ஒருவேளை பிசிசிஐ தலைவராக நான் போட்டியின்றிகூட தேர்வு செய்யப்படலாம். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டால், எனக்கு மிகப்பெரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, நிதி அடிப்படையிலும் வலுவான கிரிக்கெட் அமைப்பு என்பதால் நிர்வாகம் செய்வது சவாலான பணியாகும்

பிசிசிஐ தலைவராக இப்போது நான் பொறுப்பேற்றால், 9 மாதங்கள்தான் தலைவராக இருக்கமுடியும். அதற்காக நான் வருத்தப்படவில்லை. இருக்கும் காலத்தில் நல்லவிதமான பணிகளைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சனிக்கிழமை பேசியது உண்மைதான். ஆனால், மேற்கு வங்கத்தில் நடக்கும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள் என்று என்னிடம் கேட்கவில்லை. அது குறித்துப் பேசவும் இல்லை'' என்று கங்குலி தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x