

புனே டெஸ்ட் போட்டியில் எந்த வித போராட்டக்குணத்தையும் வெளிப்படுத்தாமல் (பிலாண்டர், மஹராஜ் நீங்கலாக) இந்திய அணியிடம் சரணடைந்து பாலோ ஆன் ஆடி இன்னிங்ஸ் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தோல்வி குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
அவர் கூறியதாவது:
துணைக்கண்டங்களில் முதல் இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது, முதல் இன்னிங்சில் நாம் எடுக்கும் ரன்கள்தான் நமக்கு வாய்ப்பைத் தரும். ஆனால் இந்திய அணி பேட் செய்த விதம் பிரமாதம், குறிப்பாக விராட் கோலி அசாத்தியமாக ஆடினார், இதற்கு மனரீதியாக நிறையக் கடினத்தன்மை தேவை. 2 நாட்கள் களத்தில் பீல்ட் செய்து விட்டு உடனே இறங்கி ஆடுவது கடினம்.
அது நம்மைக் களைப்படையச் செய்து விடும். குறிபாக 2ம் நாள் மாலை மனத்தளவில் பேட்ஸ்மென்கள் பலவீனமாக இருந்தார்கள். பிறகு என்ன விட்டதைப் பிடிக்கும் வேலைதான், இந்த டெஸ்ட் போட்டியில் எங்கள் ஆட்டம் போதாது.
விராட் கோலியைப் பொறுத்தவரை களவியூகத்தில், பந்து வீச்சு மாற்றங்களில் என்று நாங்கள் அவருக்கு சவால்களை எழுப்பினோம் ஆனால் அவற்றுக்கெல்லாம் கோலியிடம் விடை இருந்தது. கோலி மிக மிகப் பிரமாதம், அவரது வேட்கை தனித்துவமானது. அவர் 100, 150, எதிலும் திருப்தியடையவதில்லை.
தொடக்கத்தில் பிலாண்டர், ரபாடா கொஞ்சம் அழுத்தம் கொடுத்தனர், நாத்தியேவை உடனடியாக அறிமுக டெஸ்ட் போட்டியில் கடினமான சூழ்நிலையில் நாம் பெரிதாக எதிர்பார்ப்பது தவறாகும். இந்திய அணி ஜோடியாக நன்றாக வீசினர். மொத்தத்தில் வெற்றி பெறத் தகுதியான அணி இந்திய அணியே.
இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம், சாதனைகளே இதனை எடுத்துக் காட்டும்.
இவ்வாறு கூறினார் டுபிளெசி.