Published : 13 Oct 2019 05:11 PM
Last Updated : 13 Oct 2019 05:11 PM

நாங்கள் ஒரு அணியாகத் தொடங்கிய போது டெஸ்ட் தரவரிசையில் 7ம் இடத்தில் இருந்தோம்.. பிறகு ஏற்றம்தான் : விராட் கோலி பெருமிதம்

புனே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியதோடு உள்நாட்டில் 11 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்று ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது.

இந்தப் போட்டியில் விராட் கோலி 254 ரன்களை அடித்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டைச் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இந்நிலையில் ஆட்ட நாயகனும், வெற்றிச் சாதனை கேப்டனுமான விராட் கோலி இந்த வெற்றி குறித்து கூறியது:

இரு நாட்களுக்கு முன்பாக நான் கூறியது போல் கேப்டனாக பொறுப்பு வகிப்பது என் பேட்டிங்கை இன்னும் மேம்படுத்தியுள்ளது. இரட்டைச் சதம் என்று திட்டமிட்டால் எல்லாம் அடிக்க முடியாது, 5 செஷன்கள் நிற்க வேண்டும் என்று இறங்கி ஆடினால் இரட்டைச் சதம் வந்தே தீரும். தொடக்கத்தில் இதையெல்லாம் தனிப்பட்ட விஷயமாக எடுத்துக் கொள்வேன், ஆனால் அணியை யோசிக்கும் போது எனக்கு எல்லா அழுத்தங்களும் மறைகின்றன.

கரியரின் தொடக்கத்தில் சிலர் நம் மீது வைத்திருக்கும் பார்வை தவறு என்று நிரூபிக்க ஆடுவோம், இப்போதெல்லாம் நான் எங்கு இருக்கிறேனோ அதிலேயே மகிழ்ச்சியடையும் நிலைக்கு என் கரியரும் வந்து விட்டது.

அணியை ஒரு வலுவான நிலைக்கு இட்டு செல்ல வேண்டும், அதற்காகவே நான் பேட்டிங்கில் பாடுபடுகிறேன். எனக்கு பேட்டிங் செய்வது, நீண்ட நேரம் பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும், அதுவே வெற்றிக்கு பங்களித்தால் அதைப்போன்ற வேறு எதுவும் இல்லை.

நான் உண்மையில் ரஹானேவுடன் பேட் செய்வதை விரும்புகிறேன், நாங்கள் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் மாற்றமின்றி அணியை முன்னோக்கி நகர்த்துகிறோம். சூழ்நிலை கடினமாக இருக்கும் போது பங்களிப்பு செய்வதில் எங்களுக்கு பெருமையளிக்கிறது. விஷயங்கள் தவறாகப் போகும் போது ரஹானே எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்குகிறார். நானும் அவருக்கு வழங்குகிறேன்.

நாங்கள் ஒரு அணியாக தொடங்கும்போது டெஸ்ட் தரவரிசையில் 7ம் இடத்தில் இருந்தோம். ஒரே வழி ஏற்றம்பெறுவதாகத்தான் இருக்க முடியும். அனைவரையும் பயிற்சியில் கடுமையாக உழைக்குமாறு கூறினோம், சிலபல திட்டங்களை வகுத்தோம். கடந்த 3-4 வருடங்களாக அணியில் நம்முடன் ஆடிவரும் வீரர்கள் நமக்கு உண்மையில் அதிர்ஷ்டம்தான். மேம்பாடு அடைவதில் அனைத்து வீரர்களுக்கும் இருக்கும் வேட்கை பிரமாதமானது.

விசாகில் சஹா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் அருமையான விக்கெட் கீப்பிங். டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் சோர்வுக்கு இடமில்லை அடுத்த போட்டியிலும் வெற்றிக்காகவே உழைப்போம் இது உறுதி.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x