Last Updated : 13 Oct, 2019 04:47 PM

 

Published : 13 Oct 2019 04:47 PM
Last Updated : 13 Oct 2019 04:47 PM

டெஸ்ட் தொடரை வென்று உலக சாதனை: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி; தெ.ஆப்பிரிக்கா சரண்

புனே,

அஸ்வின், ஜடேஜா,உமேஷ் யாதவ் ஆகியோரின் நெருக்கடியான பந்துவீச்சால், புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது இந்தியஅணி

உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஷமி , இசாந்த் ச்ரமா ஆகியோர் தங்களுக்கு உரிய பொறுப்பை உணர்ந்து சிறப்பாகப் பந்துவீசி அணிக்கு மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஆட்டநாயகனாக கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. டெஸ்ட் போட்டி முடிய இன்னும் ஒரு நாள் இருக்கும் முன்பே போட்டி முடிவுக்கு வந்துள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென் ஆப்பிரிக்க அணி பாலோ-ஆன் பெற்று இன்று காலை 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

இந்திய அணி வீரர்களின் கட்டுக்கோப்பான, நெருக்கடி தரும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

புதிய சாதனை

இந்த வெற்றி மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11-வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா மட்டுமே சொந்த மண்ணில் 10 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றிருந்தது. அதை முறியடித்து, இந்திய அணி 11-வது டெஸ்ட் தொடரை வென்று உலக சாதனை படைத்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரு போட்டிகளில் வென்று 80 புள்ளிகளைப் பெற்று 200 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சிக்குரியது.


இந்தியாவின் ஆடுகளங்கள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தும் போது ஆடுகளங்களை ஐசிசி மேற்பார்வையில் அமைத்தால்தான் எந்த அணிக்கும் சார்பில்லாமல் அமையும்.

இந்திய அணியில் இருப்பதைப் போல் தென் ஆப்பிரிக்காவிலும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும், பந்துவீச்சு இந்திய அணியினருக்கு மட்டும் கைகொடுப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆடுகளங்களை தரமான வகையில் அமைத்தால் மட்டுமே போட்டி சமமானவர்களுக்கு இடையே நடத்தப்பட்டதாக கருதப்படும்.

முதலில் பேட்டிங் செய்யும் அணி 600 ரன்கள் வரை அடித்தாலே அது பெரும்பாலும் எதிரிணியினருக்கு மனச்சோர்வை ஏற்படுத்திவிடும். 150 ஓவர்கள் வரை எதிரிணி வீரர்கள் பீல்டிங் செய்துவிட்டு, மீண்டும் இமாலய இலக்கை நோக்கி விரட்டி ஓடுவது என்பது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று இந்திய அணியின் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.

அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணித் தரப்பிலும் பிரச்சினைகள் இல்லை,தரமான அணிதான் என்று கூறிவிட முடியாது. டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் தங்களை தகவமைத்து விளையாடும் வீரர்கள் இல்லாததும், கடந்த காலங்களில் இருந்ததைப் போன்று போராட்டக் குணம் இல்லாமல் இருப்பதும், விட்டேத்தியாக பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் கவனம் செலுத்துவதும் டெஸ்ட் போட்டிக்கான சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும்.

புனே ஆடுகளம் முதல்நாளில் 2 மணிநேரம் வரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்துதான் இருந்தது. ஆனால், அதை தென் ஆப்பிரிக்க வீரர்கள் பயன்படுத்தி விக்கெட் எடுத்திருந்தால் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கும்.

ஆனால் போராட்டக் குணமின்றி பந்துவீசியதும், பொறுப்பற்ற முறையில் பீல்டிங் அமைப்பும் டெஸ்ட் போட்டியில் விருப்பமின்றி இருக்கிறார்களோ என்ற கேள்வியைத் தான் ரசிகர்கள் முன் எழுப்புகிறது

இந்திய அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் வலிமையானது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், இந்திய அணியின் வலிமையை சோதித்துப் பார்க்க இதுபோன்ற ஆடுகளங்களும், அணிகளும்தான் கேள்வியாக இருக்கின்றன.

இப்போது இருக்கும் கோலி தலைமையிலான அணி எந்த நாட்டுக்கும் ஈடுகொடுத்து ஆடும் தகுதிபடைத்ததாக இருக்கிறது,

தொடர்ந்து இதுபோன்ற சொத்தை ஆடுகளங்களிலும், தென் ஆப்பிரிக்க போராட்ட குணமில்லாத அணியை தோற்கடிப்பது என்பது செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிப்பதாக அமையும். போட்டியின் முடிவும் ஒருதரப்பாகத்தான் இருக்கும்.

ஆஸ்திரேலியா சென்றால் தென் ஆப்பிரிக்க அணி தொடர்களை வெல்கிறது, இங்கிலாந்து சென்றாலும் தென் ஆப்பிரிக்க அணி கடும் போட்டி அளிக்கிறது. ஆனால், இந்தியா வந்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியால் விளையாட முடியவில்லை என்ற கேள்விக்கு ஆடுகளம் காரணமில்லை என்ற பதிலை மட்டுமே ஏற்க முடியாது.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மயங்க் அகர்வால் சதம்(108), விராட் கோலியின்(254) இரட்டை சதம் ஆகியவற்றால் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு பாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி. இன்றைய 4-வது நாளில் தென் ஆப்ரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களின் ஸ்விங் பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டை இழந்து வந்தது.

எல்கர், மார்க்ரம் இன்றைய ஆட்டதைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி இசாந்த் சர்மா வீசிய முதல் ஓவரில் மார்க்ரம் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து புருய்ன் களமிறங்கினார். உமேஷ் யாதவ் வீசிய 6-வது ஓவரில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார், சஹா இடது புறம் பறந்து அற்புதமாகக் கேட்ச் எடுத்தார்.

அடுத்து வந்த கேப்டன் டூப்பிளஸியும் நிலைக்கவில்லை. எல்கருக்கு துணையாக ஆடிய டூப்பிளஸி 50 பந்துகளைச் சந்தித்த போதிலும், 5 ரன்கள் மட்டுமே சேர்த்து அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். மதிய உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்திருந்தது.

ஓரளவுக்கு நிலைத்து ஆடிய எல்கர் 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவுமா 38 ரன்னிலும், டீ காக் 5 ரன்னிலும் முத்துசாமி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸைப் போன்றே பிலாண்டரும், கேசவ் மகராஜும் இணைந்து இந்தியப் பந்துவீச்சை சோதித்தனர். இருவரையும் பிரிக்க இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள். இருவரும் 55 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பிலாண்டர் 37 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சாஹாவிடம் விக்கெட்டை இழந்தார். பிலாண்டர் அடித்த 2 சிக்சர்கள் தைரியமானது.

அடுத்து வந்த ரபாடா 4 ரன்கள் சேர்த்து உமேஷ்யாதப் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசிவரை போராடிய கேசவ் மகராஜ் 22 ரன்கள் சேர்த்தபோது ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

67.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஷமி, இசாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

-போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x