

உலான் உடே,
ரஷ்யாவில் நடந்துவரும் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி 48 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிக் பதக்கத்தோடு விடை பெற்றார்.
48 கிலோ எடைப்பிரிவில் ரஷ்ய வீராங்கனை கேத்தரினா பால்சிவாவிடம் 4-1 என்ற கணக்கில் மஞ்சு ராணி தோல்வி அடைந்தார்.
51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம், 54 கிலோ எடைபிரிவில் ஜமுனா போரோ, 69 கிலோ எடைப்பிரிவில் லோவ்லினா போர்கோஹெயின் ஆகிய இந்திய வீராங்கனைகள் வெண்கலம் வென்றநிலையில் மஞ்சு ராணி வெள்ளி வென்றுள்ளார்
இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை கேத்ரினா பால்சிவாவை எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி. இருவரும் முதல் சுற்றில் கடுமையாக மோதிக்கொண்டார்கள். ஆனால், 3 -வது நிமிடத்திலே ரஷிய வீராங்கனை கேத்தரினா, மஞ்சு ராணியின் இடதுபுற கன்னத்தில் பஞ்ச் கொடுத்து புள்ளிக்கணக்கை தொடங்கினார்.
2-வது சுற்றில் மஞ்சு ராணி ஆதிக்கம் செலுத்தி சில நல்ல பஞ்ச்களை கொடுத்து முதல் புள்ளியைப் பெற்றார்.
ஆனால், கடைசி 3 நிமிடங்களில் இரு வீராங்கனைகளும் தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமாகவே விளையாடினார்கள் என்றாலும், இதில் ரஷ்ய வீராங்கனை கேத்தரினாவின் ஆதிக்கமே இருந்ததால் மஞ்சு ராணியை 4-1 என்ற கணக்கில் கேத்தரினா வீழ்த்தினார்
ஹரியானா மாநிலம் ரோடக் மாவட்டம் ரித்தல் போகட் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சு ராணி என்பது குறிப்பிடத்தக்கது
பிடிஐ