

ரோஹித் சர்மாவை டெஸ்ட் தொடக்க வீரராக களமிறக்கும் முயற்சி பிரமாதமான ஒரு முடிவாகும், இதனால் ரோஹித்தின் டெஸ்ட் வாழ்க்கையும் இந்திய அணிக்குமே கூட பல நல்ல சாத்தியங்களை வழங்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.
ஈஎஸ்பின் கிரிக் இன்போவில் அவர் எழுதிய பத்தியில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
அறிமுக டெஸ்ட் போட்டியிலும் அதற்கு அடுத்த டெஸ்ட்டிலும் ரோஹித் சர்மா மே.இ.தீவுகளுக்கு எதிராக சதமெடுத்தார், ஆனால் அப்போது 6ம் நிலையில் இறங்கினார்.
தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்கத்தில் இறங்கி 2 சதங்களை அடித்திருக்கிறார். அதுவும் ரபாடா, பிலாண்டர் உள்ளிட்ட வலுவான பவுலிங்குக்கு எதிராக அடித்துள்ளார்.
இதில் முக்கியம் என்னவெனில் கோலிக்கு முன்னதாக அவர் இறங்கியிருப்பது அவரது டெஸ்ட் வாழ்க்கையின் வெற்றி தோல்வியை முடிவு செய்வதாகும். 2013-ல் டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய ரோஹித் சர்மா தொடர்ந்து அதில் மங்கலாகி 35 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு மீண்டும் சதம் எடுத்துள்ளார். இடையில் அவரது மிதமான வெற்றிகள் என்பது அவரை இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயும் வைத்திருந்தது. அதாவது அவர் தன் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் அவரைத் தொடக்க வீரராக இறக்கியிருப்பது பொருள் பொதிந்ததாக இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் சக வீரர் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அபாயகரமான வீரராக ரோஹித் திகழ்கிறார். அதே போல் டெஸ்ட்டிலும் கோலிக்கு முன்னதாக அவர் இறங்கி ஆடுவது டெஸ்ட் அரங்கில் அவர் மீண்டும் கோலோச்ச வழிவகை செய்யும்.
ரோஹித்தை டெஸ்ட் மட்டத்தில் 2 விஷயங்கள் சற்றே தடுத்து வந்தன, ஒன்று தான் எந்த வகையான வீரர் என்பதில் அவருக்கு உறுதி இல்லை, இன்னொன்று விராட் கோலியின் ஆளுமை. இது கேப்டனின் தவறல்ல, இந்திய ரசிகர்களிடையே விராட் கோலிக்கு உள்ள பெரும் பிராபல்யமே. கிரீஸிற்கு கோலி வருகிறார் என்றவுடனேயே ரசிகர்களின் ஆரவாரக்கூச்சல் எந்த ஒரு சிறந்த வீரரையும் கொஞ்சம் அச்சுறுத்தவே செய்யும்.
இதற்கு உதாரணம் உள்ளது, மே.இ.தீவுகளில் விவ் ரிச்சர்ட்ஸ் இறங்கும் போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும் அப்போதெல்லாம் தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்ஜை ஆஸ்திரேலியர்கள் வீழ்த்தும் வாய்ப்புகள் முன்னேற்றம் கண்டது. கார்டன் கிரீனிட்ஜ் ஒரு அருமையான பேட்ஸ்மென், அவருக்கே அவரது திறமை தெரியாது, ஆனால் மிகச்சிறந்த பேட்ஸ்மென் அவர். ஆனால் ரிச்சர்ட்ஸ் மேலிருந்த ஒளிவட்டம் கிரீனிட்ஜை சுருங்கச் செய்தது.
ஆகவே கோலிக்கு முன்பாக ரோஹித் சர்மா இறங்குவது அவர் தன்னை டெஸ்ட் அரங்கில் நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் கோலி மீதான ரசிகர்களின் காதல் ரோஹித் மீது தீங்கான விளைவுகளை ஏற்படுத்துவதைக் குறைக்கும்.
அவர் தொடக்கத்தில் இறங்கிய பொது விசாகப்பட்டிணத்தில் நிறைய சிக்சர்களை அடித்த போதே எனக்குத் தெரிந்தது அவர் பின்னால் இறங்கி ஆடும் ஆட்டத்துக்கும் இதற்கும் கூர்மையான வித்தியாசம் இருந்ததைப் பார்த்தேன்.
ரோஹித் டெஸ்ட் கரியரை புத்துயிர்ப்புப் பெறச் செய்ய இந்திய அணித்தேர்வாளர்களின் இந்த முடிவு அவர்களுக்கு உரிய பெருமையைச் சேர்ப்பதாகும்.
2008-ல் ரோஹித்தை ஆஸி.யில் ஒருநாள் தொடரில் பார்த்த போது படுக்கைவச மட்டையில் அவர் அடித்த ஷாட்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அப்படிப்பட்டவர் தன்னை டெஸ்ட் அரங்கில் நிலைநிறுத்திக் கொள்ள 11 ஆண்டுகள் ஆகியும் முயன்று வருவது எனக்கு புதிராக உள்ளது. ஆனால் இந்த சமீபத்திய மாற்றம் இந்திய அணிக்கு மட்டுமல்ல டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நல்லதுதான். அவர் இன்னும் சிறுபிள்ளை என்றாலும் அவரால் ரசிகர்களை இன்றும் கூட குஷிப்படுத்த முடியும்.
இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.